பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் அதிகளவிலான எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் மிடில் கிளாஸ் மக்கள் மகிழ்ச்சி அடைய அதிகளவிலான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வருமான வரி விதிப்பில் மிகப்பெரிய சலுகை அறிவிப்புக் காத்துக்கொண்டு இருப்பதாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கொரோனா தாக்கம்
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை ஊக்குவிக்க மத்திய அரசு ஆத்ம நிருபர் பாரத் திட்டத்தின் கீழ் பல சலுகைகள் தொழிற்துறைக்கும், வர்த்தகத் துறைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தனிநபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் ஒரு வாய்ப்பாக மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளது.

நிர்மலா சீதாராமன்
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், நாட்டு மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காகத் தனிநபர் வருமான வரிச் சலுகை அளவை உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது.

0 சதவீதம் வரி
இதன் படி வருடம் 2.50 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு, வருமான வரித்துறை 0 சதவீதம் வரிச் சலுகை அளித்து வரும் நிலையில், இதன் அளவீட்டை 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தி இந்த 2021 பட்ஜெட்டில் அறிவிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

இடைக்காலப் பட்ஜெட் அறிக்கை
2019ஆம் ஆண்டு இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் அனைவருக்கும் டாக்ஸ் ரிபேட் சலுகையை அறிவித்தது. ஆனால் அடிப்படை வருமான வரி சலுகையை உயர்த்தவில்லை.

2020 பட்ஜெட்
இதேபோல் 2020 பட்ஜெட் அறிக்கையிலும் தனிநபருக்கு வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்பதற்காகப் புதிய வருமான வரிக் கணக்கீட்டை அறிவித்தது. இதுவும் பலருக்கும் பெரிய அளவிலான நன்மையை அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடமும் அடிப்படை வருமான வரி சலுகையை அளவீட்டை உயர்த்தவில்லை.

5 லட்சம் வரை வரிச் சலுகை
ஆனால் 2021 பட்ஜெட் அறிக்கையில் மிடில் கிளாஸ் மக்களுக்குப் பலன் கிடைக்கும் வகையில் அடிப்படை வருமான வரி சலுகையை 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்புப் பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும் பட்சத்தில் மிடில் கிளாஸ் மக்களுக்கு இது உண்மையிலேயே ஜாக்பாட் தான்.