இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி-ஐ நீக்கப்பட்ட நாளில் இருந்து டாடா குழுமத்திற்கும், எஸ்பி குரூப் குழுமத்திற்கும் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எஸ்பி குரூப் குடும்ப நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 18.37 சதவீத டாடா சன்ஸ் பங்குகளை வாங்கத் தயார் என அறிவித்தது.
சைரஸ் மிஸ்திரியின் குடும்ப நிறுவனமான எஸ்பி குரூப் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருக்கும் நிலையில், டாடா குழுமத்தின் இந்த முடிவைச் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், டாடா குழுமம் கோரிக்கை வைத்த சில நாட்களிலேயே தனது கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா சன்ஸ் பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18.37 சதவீத பங்குகள் சுமார் 24 பில்லியன் டாலருக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்பி குரூப் கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை டாடா எப்படி வாங்கப்போகிறது தெரியுமா..?

டாடா சன்ஸ்
100க்கும் அதிகமாக நிறுவனங்களைக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் சாப்ட்வேர் முதல் கார் வரையில் பல வர்த்தகங்களைக் கொண்டுள்ள டாடா சாம்ராஜ்ஜியத்தின் தாய் நிறுவனம் தான் இந்த டாடா சன்ஸ். சுமார் 113 பில்லியன் டாலர் மதிப்பிலான இக்குழுமத்தின் டாடா சோன்ஸ்-ன் 18.37 சதவீத பங்குகளைப் பலோன்ஜி மிஸ்திரி மற்றும் அவரது குடும்பத்தின கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்பி குரூப் எனப்படும் Shapoorji Pallonji குரூப் வைத்துள்ளது.

பங்கு விற்பனைக்குத் தடை
டாடா மற்றும் எஸ்பி குரூப் இடையிலான பிரச்சனையின் எதிரொலியாகப் பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒன்று எஸ்பி குரூப் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா குழுமப் பங்குகளை விற்பனை செய்ய அக்டோபர் 28ஆம் தேதி வரையில் தடை பெற்றுள்ளது டாடா குழுமம். இதனால் மிஸ்திரி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா பங்குகளை நிதி தேவைக்காக வெளி முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முடியாது.

100% டீல்
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் போது, எஸ்பி குரூப் கடனில் சிக்கியுள்ளதை உணர்ந்து பங்குகளைத் தானே பெற விருப்பம் தெரிவித்தது. இதற்கு எஸ்பி குரூப் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18.37 சதவீத பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய ஒப்புக்கொண்டது.

பங்குகளுக்குப் பதிலாகப் பங்குகள்
இந்நிலையில் எஸ்பி குரூப் தற்போது 18.37 சதவீத டாடா சன்ஸ் பங்குகளுக்குப் பதிலாக டாடா குழுமத்தின் இதர பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைப் பெறத் தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது.
இதுகுறித்து மிஸ்திரி குடும்பம் கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்பி குரூப் சுப்ரீம் கோட்டில் சமர்ப்பித்த மனுவில் 18.37 சதவீத டாடா சன்ஸ் பங்குகளுக்கு இணையாக டாடா பிராண்ட் மதிப்பை தற்போது சந்தை விலைக்குக் கணக்கிட்டு பணமாகவோ அல்லது பட்டியலிடப்பட்ட பிற டாடா குழும நிறுவனப் பங்குகளைப் பெறத் தயார் எனத் தெரிவித்துள்ளது.
இதேபோல் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பட்டியலிடாத டாடா நிறுவனங்கள் தொடர்புடைய டாடா சன்ஸ் பங்குகளைத் தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்து அதற்கு இணையாகப் பணமோ அல்லது பட்டியலிடப்பட்ட பிற டாடா குழும நிறுவனப் பங்குகளைப் பெறத் தயார் என்றும் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ்
மேலும் அந்த மனுவில் டாடா சன்ஸ் பங்குகளை எளிதாக மாற்றப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களான டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளைக் கொடுக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது எஸ்பி குரூர். இதன் மூலம் டாடா குழும பங்குகளின் புழக்கம் சந்தையில் அதிகரிக்கும் என்றும் குறிப்பித்துள்ளது.
இதன் மூலம் எஸ்பி குரூப்-ன் முக்கிய இலக்காக டிசிஎஸ் உள்ளது. டாடா குழுமத்தின் தங்க முட்டையிடும் வாத்து டிசிஎஸ் என்பதால் டாடா குழுமம் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது.

ஜாக்பாட்
மிஸ்திரி குடும்பத்தின் பங்குகளுக்குப் பதிலாகப் பங்குகள் ஆஃபர் டாடா குழுமத்திற்கு ஜாக்பாட், காரணம் டாடா குழுமம் தற்போது பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் பங்குகளைப் பணம் கொடுத்து வாங்கினால் மிகப்பெரிய கடனில் டாடா குழுமம் சிக்கிக்கொள்ளும்.
இதுமட்டும் அல்லாமல் பங்குகளுக்குப் பதிலாகப் பங்குகள் என்றால் பங்கு பரிமாற்றம் விரைவாகச் செய்து முடிக்க முடியும். இதனால் மிஸ்திரி மற்றும் டாடா குழுமத்திற்கு மத்தியிலான பிரச்சனை சில மாதங்களில் முடிவடையும்.

ஆய்வு
எஸ்பி குரூப்-ன் பரிந்துரையைத் தற்போது டாடா குழுமம் ஆய்வு செய்து வருகிறது, ஆனால் டாடா குழுமத்தின் மிக முக்கிய நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் பங்குகளைக் கொடுக்கும் போது டாடா-வின் ஆதிக்கம் இந்நிறுவனத்தின் குறைய வாய்ப்புள்ளது.
இதேபோல் டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா குடும்பத்திற்கு அடுத்தாக அதிகப் பங்குகளை வைத்துள்ளது எஸ்பி குரூப் தான், இந்தப் பங்கு பரிமாற்றம் நடந்தால் டாடா சன்ஸ்-ன் மொத்த உரிமையும் டாடா குடும்பத்திற்கே கிடைக்கும்.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ளதால் டாடா குழுமத்தின் முடிவை எதிர்நோக்கி எஸ்பி குரூப் காத்துக்கொண்டு இருக்கிறது.

18 பில்லியன் டாலர்
மிஸ்திரி குடும்பத்தின் மனுவிற்கு ஏற்ப டாடா குழுமம் பங்குகளைக் கொடுத்தால் 24 பில்லியன் டாலர் மதிப்பிலான 18.37 சதவீத டாடா சன்ஸ் பங்குகளுக்குக் குறைந்தபட்சம் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான டிசிஎஸ் பங்குகளை மிஸ்திரி குடும்பம் பெறும்.
இது டாடா குழும முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.