இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களும் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்களுக்கான அறிவிப்பு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், மோடி அரசிடம் இருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
2020ல் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மற்றும் பொருளாதாரப் பாதிப்பால் நாட்டில் அதிகமானோர் தங்களது வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உடனடியாக உருவாக்கும் திட்டங்களைக் கண்டிப்பாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதைத் தாண்டி சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் குறிப்பாக வருமான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்பு இதுதான்

வருமான வரிக் குறைப்பு
2020ல் அதிகமானோர் வேலைவாய்ப்புகள் இழந்துள்ள நிலையில் வருமான வரிக் குறைப்பை அதிகமானோர் எதிர்பார்க்கின்றனர். இதோடு அடிப்படை வருமான வரிச் சலுகை அளவீட்டை 2.5 லட்சம் ரூபாய் அளவை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பலன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களுக்கு வரிச் சலுகை
இந்தியாவில் வீடு வாங்குபவர்களும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு வருமான வரிச் செலுத்துவதில் சலுகை அளிக்கப்படும் நிலையில், பல இளம் ஊழியர்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் வருமான வரியில் சலுகை வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்திய ஆட்டோமொபைல் துறை
இந்திய ஆட்டோமொபைல் துறை பல மாதங்களுக்குப் பின் 2020 பண்டிகை காலத்தில் வர்த்தக வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், சாதாரணப் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவோருக்கும் வருமான வரியில் சலுகை கொடுத்தால் ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகம் வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் இத்துறையில் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும்.

HRA பிரச்சனை - வீட்டு வாடகை
பெரும்பாலான ஊழியர்கள் தங்களது HRA-ஐ முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், இதை முழுமையாக க்ளைம் செய்யும் படி புதிய சட்ட விதிகளைக் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக டிஜிட்டல் அல்லது காசோலை முறையிலான பேமெண்ட்களைக் கணக்கில் கொண்டு கணக்கிடும் வகையில் புதிய வரைமுறையைக் கொண்டு வரவேண்டும் என விரும்புகின்றனர்.

மூத்த குடிமக்கள்
மேலும் மூத்த குடிமக்கள், தற்போது 50,000 ரூபாய் வரையிலான வட்டி வருமானத்திற்கு வரிச் சலுகை பெறுகின்றனர். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைப் பெரிய அளவில் குறைத்துள்ள நிலையில் வருமானமும் குறைந்துள்ளது. எனவே இந்த அளவீட்டை 1 லட்சம் வரையில் உயர்த்த வேண்டும் என மூத்த குடிமக்கள் விரும்புகின்றனர்.