உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா-வால் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கச் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுக்க உள்ளதாக மோடி அறிவித்துள்ளார். மேலும் இத்திட்டம் Aatmanirbhar Bharat என்ற பெயரில் இயங்க உள்ளதாகவும் மோடி அறிவித்துள்ளார்
இதோடு இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் உடன் 4வது முறையாக மீண்டும் ஊரடங்கும் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், இதுகுறித்த விரிவான அறிவிப்புகள் மே 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.
சரி, உண்மையில் 20 லட்சம் கோடி ரூபாயில் மக்களுக்கு என்ன கிடைக்கும்.
ஒரு முறைக்கே தாங்கல.. இரண்டாவது முறை கொரோனாவா.. விளைவு சரியும் கச்சா எண்ணெய் விலை..!

அமெரிக்கா
கொரோனா தாக்கதால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ள வல்லரசு நாடான அமெரிக்கா பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை மீட்டு எடுக்க அந்நாட்டின் 13 சதவீத ஜிடிபி தொகையை ஒதுக்கியுள்ளது.
இதை ஈடு செய்யும் வகையிலும், உலக நாடுகளுக்கு முன் இந்தியா எந்த வகையிலும் மக்களுக்குக் குறைவாகச் செய்துவிடவில்லை என்பதையும் காட்டவே இந்திய ஜடிபி-யில் 10 சதவீதம் அதாவது 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார மீட்டுபு திட்டத்தை அறிவித்துள்ளார்.
ஆனால் இதில் ஏற்கனவே அறிவித்த பல்வேறு திட்டங்கள் அடக்கம்.

ரிசர்வ் வங்கி
20 லட்சம் கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை தான், ஆனால் இதில் 20 லட்டம் கோடி ரூபாய் திட்டத்தில் சமீப காலத்தில் அறிவிக்கப்பட்ட முக்கியத் துறைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும், தளர்வுகளும் அடங்கும்.
தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள பொருளாதார மற்றும் வர்த்தகச் சந்தை மீட்பு திட்டங்களின் மதிப்பு 5 முதல் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இருக்கும்.
இதனால் மக்களுக்குக் கிடைக்கப்போவது 12 முதல் 15 லட்சம் கோடி ரூபாய் தான்.

MSME நிலுவை தொகை
சிறுகுறு தொழிற்துறை அமைச்சர் நித்தின் கட்கரி சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் முக்கியமான விஷயத்தைக் கூறினார் "இந்தியாவில் பல கோடி சிறுகுறு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை மகிப்பெரியதாக உள்ளது. இதில் ஜிஎஸ்டி தொகையும் அடக்கம். அதேபோல் இத்தொகைக்கு வங்கிக் கடனை சிறுகுறு நிறுவனங்கள் பெறலாம்" எனவும் தெரிவித்தார் நித்தின் கட்கரி. இந்தத் தொகையே பல லட்சம் கோடி ரூபாய் இருக்கும் எனப் பல்வேறு கணிப்புகள் கூறுகிறது.
மோடி தற்போது அறிவித்துள்ள பொருளாதார மீட்பு திட்டத்தில் இந்தத் தொகையைச் சேர்த்தால், நிச்சயம் அது அநியாயம். ஏனெனில் இது ஏற்கனவே அரசு நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையை.

புதிய முதலீடுகள்
மத்திய அரசு புதிய முதலீடுகளுக்குச் சலுகை அளித்தால் அது எந்த விதத்திலும் உடனடியாக மக்களுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பலன் அளிக்காது. காரணம் புதிய முதலீடுகளைச் சலுகை மூலம் ஈர்த்தாலும் அது வர்த்தகச் சந்தைக்கு வரவும், அதனால் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாகக் குறைந்தது 1 வருடம் ஆகும்.
ஆதலால் மோடி அறிவிக்க இருக்கும் பொருளாதார மீட்பு திட்டத்தில் இதைச் சேர்த்தால் எவ்விதமான பயனும் இல்லை.

உண்மை தொகை
இதை எல்லாவற்றையும் நீக்கினால் நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு அறிவித்துள்ள இந்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் வெறும் 6 முதல் 8 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே பணப் புழக்கத்திற்காக வரும்.
இது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 10 சதவீத ஜிடிபி-யில் வெறும் 3 முதல் 4 சதவீத ஜிடிபி மட்டுமே.

வேலைவாய்ப்பு சந்தை
இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் சுமார் 50 கோடி பேர் இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பின் காரணமாக 25 சதவீதம் பேர் அதாவது 12.5 கோடி பேர் வேலைவாய்ப்பை முழுமையாக இழந்துள்ளனர். அதேபோல் 25 சதவீத பேர் வேலை செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
கிட்டதட்ட 25 கோடிப்பேர் தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலையில், இவர்கள் கையில் இருக்கும் பணம் அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையாகத் தீர்ந்துவிடும் என CMIE ஆய்வுகள் கூறுகிறது.

யாருக்கு இந்த ரூ.6-8 லட்சம் கோடி...?
மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் மீதமுள்ள 6-8 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தற்போது பணப்புழக்க சந்தைக்கு வரும் நிலையில், இதை வைத்து எப்படி வேலை இழந்து நிற்கும் 25 கோடிப்பேர் மற்றும் அவர்களது குடும்பத்தை மோடி அரசு காப்பாற்றப்போகிறது..?