இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் மஹிந்திரா குழுமம். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். இவர் தன் கண்ணில் தென்பட்ட சுவாரஸ்ய விஷயங்கள், சமூக நல தொண்டுகள் என பலவற்றையும் சமூக வலைதளம் மூலம் பதிவு செய்து வருபவர்.
கடந்த ஆண்டு கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, ஆனந்த் மஹிந்திரா சார்பில் வீட்டு கட்டி தருவதற்காக ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.
85 வயதாகும் கமலாத்தாள் பாட்டி ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கே விற்பனை செய்து வருகிறார். உதவிக்கு கூட யாரும் இல்லாமல் தனி ஆளாக கடையை நடத்தி வருபவர். இவரின் சேவையை அறிந்த பலரும் பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
வாராக்கடன் அதிகரிப்பு.. 600 கிளைகளை மூடும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா!

ஆனந்த் மஹிந்திரா உதவி
சமையலுக்கு போதிய வசதிகள் இல்லாமல் சமைத்து வந்த நிலையில், ஆரம்பத்தில் அவற்றை பற்றி அறிந்த ஆனந்த் மஹிந்திரா, அவருக்கு ஆரம்பத்தில் சமையல் கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் என வழிங்கினார். இன்று சாதாரண தள்ளுவண்டி கடையில் கூட ஒரு இட்லி விலை 5 ரூபாய்க்கு மேல். அப்படி இருக்கும் பட்சத்தில் 1 ரூபாய்க்கு இன்றும் இட்லி விற்பனை செய்து வரும் பாட்டியின் சேவையை வேறு யாராலும் செய்ய முடியுமா என தெரியவில்லை. இது மனதார பாராட்டக்கூடிய ஒன்றே.

சொந்த வீடு கடை
ஆனந்த் மஹிந்திராவின் உதவிக்கு பிறகு, அந்த கடையை விரிவுபடுத்த கமாலாத்தாள் பாட்டி விரும்பிய நிலையில், மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாள் பாட்டிக்கு சொந்தமாக வீடு கட்ட நிலம் வழங்கியது. அதன் பின்னர் அந்த இடத்தில் கட்டுமான பணிகளும் நடந்து வந்தது. அதில் வீடு மற்றும் கடை என இரண்டுமே இருப்பது போன்று கட்டுமானம் நடந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்னையர் தினத்தில்
இந்த நிலையில் தான் அன்னையர் தினத்தில் 2022 , கடந்த 30 ஆண்டுகளாக 1 ரூபாய்க்கு இட்லியை விற்று வந்த கமலாத்தாள் பாட்டிக்கு, ஆனந்த் மஹிந்திரா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாகவும், அவருக்கு வீட்டினை பரிசளித்துள்ளதாகவும், இது தனக்கு மன நிறைவை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அன்னையர் தினமான இன்று அவரை இட்லி அம்மா என்றும் பாசமாக அழைத்துள்ளார்.

அன்னையர் தின வாழ்த்துகள்
மேலும் அன்னையர் தினத்தன்றே இந்த பணிகளை முடித்து பரிசளித்த குழுவினருக்கும் நன்றி என மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அம்மா என்பவர் நற்பண்புகளின் உருவகம். வளர்ப்பு, அக்கறை மற்றும் சுய நலமில்லா ஒருவர். அவரையும் அவரது பணியையும் ஆதரிக்கும் விதமான செயல்கள் நம் பாக்கியம். அன்னையர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என்றும் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்னையர் தின வாழ்த்துகள்
தனது லாபத்தினையும் கருத்தில் கொள்ளாமல் 30 ஆண்டுகளாக கமலாத்தாள் பாட்டி செய்து வந்த சேவைக்கு, இது ஒரு தூண்டுகோலாக இருக்கும். இன்னும் பல்லாண்டுகள் அவரின் சேவை தொடர வாழ்த்துவதோடு, அவருக்கு குட் ரிட்டர்ன்ஸ் சார்பில் நமது அன்னையர் தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோமே.