இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி தங்களது வர்த்தகத்தைக் கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்தும் மேம்படுத்தியும் உள்ளனர்.
முகேஷ் அம்பானி தனது வர்த்தகத்தை டெலிகாம், ரீடைல் பிரிவிலும், கௌதம் அதானி தனது வர்த்தகத்தைப் போக்குவரத்து மற்றும் எனர்ஜி பிரிவிலும் விரிவாக்கம் செய்து வரும் வேளையில், கௌதம் அதானி செய்த ஒரு காரியம் இருவர் மத்தியில் மிகப்பெரிய போட்டியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு.. சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!

கௌதம் அதானி
சமீபத்தில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் சவுதி அரேபியாவின் ஆராம்கோ நிறுவனத்துடன் முக்கியமான வர்த்தகம், பங்கு விற்பனை, முதலீடு அடங்கிய முக்கியமான பேச்சுவார்த்தையைத் துவங்கியது. இது முகேஷ் அம்பானிக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் தெரியுமா..?

ஆராம்கோ திட்டம்
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆராம்கோ 2018ல் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் உடன் இணைந்து சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்க முயற்சி செய்தது. ஆனால் மகாராஷ்டிர அரசின் எதிர்ப்புக் காரணமாகத் தோல்வி அடைந்தது.

முகேஷ் அம்பானி
இந்திய சந்தை மீது தீரா ஆசை கொண்ட ஆராம்கோ 44 பில்லியன் டாலர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில் முகேஷ் அம்பானி இந்த வாய்ப்பை பெற வேண்டும் எனத் திட்டமிட்டு, ஆராம்கோ நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் முதலீடு செய்ய அழைத்தார்.

ரிலையன்ஸ் தோல்வி
ஆராம்கோ - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்தியிலான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடந்தாலும் கடைசியில் தோல்வியில் முடிந்தது. இதே நேரத்தில் தான் ஹைட்ரோகார்பன், எனர்ஜி, போக்குவரத்துத் துறையில் இருந்து அதானி குழுமம் சத்தமில்லாமல் petrochemicals பிரிவில் புதிய கிளை நிறுவனத்தைத் துவங்கியது. இது தான் பிரச்சனையின் ஆரம்பம்.

பெட்ரோகெமிக்கல் பிரிவு
அதானி குழுமம் பெட்ரோகெமிக்கல் பிரிவில் புதிய நிறுவனத்தைத் துவங்கும் போதே தெரியும் அம்பானி அதானி மத்தியில் விரைவில் பிரச்சனை போட்டி வெடிக்குமென்று . காரணம் இந்தியாவில் பெட்ரோகெமிக்கல் பிரிவில் நடக்கும் 80 சதவீத வர்த்தகம் வருமானம் அனைத்தும் ரிலையன்ஸ் மட்டுமே கைப்பற்றி உள்ளது. இதனால் அதானி போன்ற பெறு நிறுவனங்கள் வரும்போது கட்டாயம் போட்டி உருவாகும்.

கௌதம் அதானி மாஸ்டர் பிளான்
ஆனால் கௌதம் அதானி ஒரு படிக்கு மேல் சென்று 2018ல் தோல்வியில் முடிந்த ஆராம்கோ மற்றும் ADNOC நிறுவனங்களின் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான சுத்திகரிப்பு அலை திட்டத்தை அதானி குழுமம் நிறைவேற்றத் திட்டமிட்டு உள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஆராம்கோ - அதானி குழுமம்
ஆராம்கோ மற்றும் அதானி குழுமம் மத்தியில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் renewable energy, விவசாயம், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் தான் இப்புதிய முதலீடு, வர்த்தகம் ஆகியவை இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால் ஆராம்கோ-விற்கு இந்தியாவின் சுத்திகரிப்பு வர்த்தகத்தின் மீது மிகப்பெரிய கனவு உள்ளது. இதை அதானி குழுமத்தின் மூலம் எளிதாகச் சாத்தியப்படுத்த முடியும்.

இனி குழாயடி சண்டை தானா..?!
எப்படிப் பார்த்தாலும் பெட்ரோகெமிக்கல், சுத்திகரிப்பு போன்ற அனைத்து வர்த்தகத்திலும் அதானி மூலம் அம்பானிக்குப் பாதிப்பு என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அம்பானி, அதானி ஆகியோர் தனது சக போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றிப் போட்டியை குறைத்து வரும் நிலையில் அதானி, அம்பானி மத்தியில் புதிய போட்டி உருவாகியுள்ளது.

இந்திய பொருளாதாரம்
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்பது மட்டும் அல்லாமல் இந்திய வர்த்தகச் சந்தையின் ஆதிக்கம் நிறைந்த இரு முக்கிய வர்த்தகக் குழுமங்களின் தலைவர்களாகவும் இருக்கும் கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மத்தியிலான பிரச்சனை இந்தியப் பொருளாதாரத்தில் கட்டாயம் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.