இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி தனது 16.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தை வாரிசு கைகளுக்கு மாறுவது குறித்துப் பல செய்திகள், தகவல் வெளியான போது எவ்விதமான கருத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்காதவர், தற்போது தானாக முன்வந்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் தன்னையும் சேர்த்து இளம் தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகாரப்பூர்வமாகத் தலைமை நிர்வாகத்தை மாற்றும் திட்டத்திற்குத் தயாராகியுள்ளது.
திருபாய் அம்பானிக்கு மறைவுக்கு பின் முகேஷ்-அனில் அம்பானிக்கு மத்தியில் சண்டை..!

டாடா டிரஸ்ட்
ஒருபக்கம் டாடா குழுமத்தின் டாடா டிரஸ்ட் தலைவராக இருக்கும் ரத்தன் டாடா-வுக்கு 84 வயதான நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற முடிவை இதுவரையில் எடுக்காமல் உள்ளது, ஆனால் டாடா குழும வளர்ச்சி அடித்தளமாக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் இருக்கும் காரணத்தால் டாடா குழும நிறுவனத்திற்கும், டாடா முதலீட்டாளர்களுக்கும் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.

திருபாய் அம்பானி
திருபாய் அம்பானி உருவாக்கிய ரிலையன்ஸ் குழுமத்தை அவரின் மறைவுக்குப் பின் பிரித்த காரணத்தால் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு மத்தியில் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவானது மறக்க முடியாது.

ஆகாஷ், ஈஷா, அனந்த்
இத்தகைய பிரச்சனையைத் தற்போது முகேஷ் அம்பானி வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் மத்தியில் உருவாக்க கூடாது என்பதற்காகவே முகேஷ் அம்பானி முன் கூட்டியே திட்டமிட்டு நிர்வாக மாற்றத்திற்கான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளார்.

ரிலையன்ஸ் ஃபேமிலி டே
திருபாய் அம்பானியின் பிறந்த தினமான டிசம்பர் 28ஆம் தேதி நடக்கும் ரிலையன்ஸ் ஃபேமிலி டே-வில் முகேஷ் அம்பானி, வரும் காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வலிமையான மற்றும் அதீத மதிப்புமிக்க இந்திய நிறுவனமாக உயரும். கிளீன் எனர்ஜி, ரீடைல், டெலிகாம் ஆகிய பிரிவின் வர்த்தகம் புதிய உச்சத்தைத் தொடும் எனத் தான் நம்புவதாக அறிவித்தார்.

நிர்வாக மாற்றம்
மிகப்பெரிய கனவுகளையும், இலக்குகளையும் அடைய வேண்டும் என்றால் சரியான நபரால் சரியான முறையில் நிர்வாகம் செய்யப்பட வேண்டும். ரிலையன்ஸ் தற்போது தலைமை நிர்வாகம் மாற்றும் திட்டத்தில் உள்ளது, என்னுடைய தலைமுறை அதிகாரிகள் பிரிவில் இருந்து இளம் தலைமுறை அதிகாரிகளுக்குப் பொறுப்பு மற்றும் நிர்வாகத்தை மாற்ற வேண்டும், இளம் தலைமுறை தலைவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

3 பிரிவுகள் 3 பிள்ளைகள்
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருக்கும் எனர்ஜி (பெட்ரோ கெமிக்கல் மற்றும் கிளீன் எனர்ஜி), ரீடைல், ஜியோ ஆகிய 3 பிரிவுகளின் வளர்ச்சி அடுத்த தலைமுறை தலைவர்களான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி மற்றும் அனந்த் அம்பானி நிர்வாகத்தின் கீழ் புதிய உச்சத்தைத் தொடும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அடித்தளம்
அடுத்த சில தசாப்தங்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைப்போம் என முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
இதன் மூலம் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி மற்றும் அனந்த் அம்பானி ஆகிய மூவருக்கு இந்த 3 பிரிவுகள் வருமா இல்லை வால்மார்ட் நிர்வாகம் போல் நிர்வாக ஆதிக்கம் கொடுக்கப்படுமா..?

என்ன காரணம்
இதேவேளையில் முகேஷ் அம்பானியின் இந்த முடிவுக்கு அவருடைய வயது மட்டுமே காரணமாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது, காரணம் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானியின் திருமணத்திற்குப் பின்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் நிர்வாக மாற்றம், சொத்து பிரித்தல் குறித்து அவ்வப்போது தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.