இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் 19 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்று மும்பை பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய நிறுவனமாக உருவெடுத்தது.
இதற்கிடையில் 2022ஆம் நிதியாண்டில் இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனம் அடைந்திடாத 100 பில்லியன் டாலர் வருவாய் பதிவு செய்து புதிய சாதனை படைத்தது.
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி தனி அலுவலகம், தனி நிர்வாகம், புதிய திட்டங்கள் என அதிகளவிலான ஆதிக்கத்தைப் பெற்று வருகின்றனர்.
ரூ.60000 கோடி சொத்து.. ஜின்னா-வின் வாரிசு.. வியக்கவைக்கும் வாடியா குடும்பம்..!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கடந்த சில வருடங்களாகவே இருக்கும் முக்கியமான சந்தேகம், எப்போது ரிலையன்ஸ் நிர்வாக பொறுப்புகள் முகேஷ் அம்பானியின் வாரிசு கைகளுக்கு மாறும் என்பது தான்.

ஹெச்சிஎல், டிவிஎஸ்
இதற்கிடையில் ஹெச்சிஎல் நிறுவனத்தில் ரோஷினி நாடார் தலைமை மாற்றம், டிவிஎஸ் நிர்வாகத்தில் மறுசீரமைப்பு என பல முன்னணி நிறுவனத்தில் முக்கியமான உயர் மட்ட நிர்வாக மாற்றங்கள் நடைபெற்று வந்தது.

நிர்வாக பொறுப்பு
இதேவேளையில் முகேஷ் அம்பானி 3 பிள்ளைகளுக்கும் தனித்தனியாக வர்த்தகத்தை பிரித்து கொடுக்கவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்றும், முடிவுகளை எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய குடும்ப கவுன்சில் அமைப்பை சில வருடங்களுக்கு முன்பே அமைத்தது.

ரிலையன்ஸ் குடும்ப தினம்
ஆனால் இதை மறுத்த ரிலையன்ஸ் நிர்வாகம் நீண்ட காலம் இந்த நிர்வாக பொறுப்பு மாற்றம் குறித்து மறைக்க முடியவில்லை. இதன் அடிப்படையில் டிசம்பர் 2021ல் ரிலையன்ஸ் குடும்ப தினத்தில் பேசிய முகேஷ் அம்பானி அதிகார மாற்றத்தை நடைபெறுவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்கான பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்தார்.

வாரிசு
இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் கட்டாயம் தனது வாரிசு கைகளுக்கு தான் செல்லும் என்றும் ரிலையன்ஸ் ஊழியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் வெளிப்படையாக அறிவித்தார்.

முகேஷ் அம்பானி ஆதிக்கம் இருக்கும்
இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உயர்மட்ட நிர்வாக குழுவில் முகேஷ் அம்பானி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவும், கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம் தனது நிர்வாக கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்பதற்கான சிக்னல் கொடுத்தார்.

300 பில்லியன் டாலர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது 300 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டை பெற்று உள்ள நிலையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் ஆகியவை கிட்டதட்ட 100 பில்லியன் டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது.

ஜியோ, ரீடைல்
இதில் ஜியோ நிறுவனத்தை ஆகாஷ் அம்பானியும், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை ஈஷா அம்பானி ஆகியோர் முகேஷ் அம்பானியின் வழிக்காட்டுதலின் அடிப்படையில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி
இதை தொடர்ந்து நிர்வாக மாற்றம் குறித்த முடிவில் தற்போது ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி ஆகியோர் தனி அலுவலகம் (தலைமை அலுவலகம்) அமைத்து தனக்கு கீழ் தனி நிர்வாக குழுவை உருவாக்கி தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் பணிகளை துவங்கியுள்ளார். இதற்காக ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி ஆகியோரை தத்தம் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் மற்றும் சிஇஓ-வாக அறிவித்துள்ளது ரிலையன்ஸ் நிர்வாகம்.

அனந்த் அம்பானி
மேலும் முகேஷ் அம்பானியின் 3வது பிள்ளை அனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் புதிதாக துவங்கியுள்ள நியூ எனர்ஜி வர்த்தகத்தின் நிர்வாக குழுவில் சேர்ந்துள்ளார். இதன் மூலம் உரிய நேரத்தில் இவருக்கும் உயர் பதவி கொடுக்கப்பட்டு நிர்வாக பொறுப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.