இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டில் சந்தை கணிப்புகளை உடைத்து சுமார் 12.5 சதவீத வளர்ச்சியில் சுமார் 13,101 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. ஆனால் வருவாய் அளவு 22 சதவீதம் சரிந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாப அளவீடுகள் கடந்த வருடத்தின் டிசம்பர் காலாண்டை விடவும் சிறப்பாக இருந்த போதிலும் வருவாய் அளவீடு பெரிய அளவில் பாதித்துள்ளது.
பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஏற்பட்ட மோசமான வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்குகள் 2.30 சதவீத சரிவை எதிர்கொண்டு ஒரு பங்கு விலை 2049.65 ரூபாய் அளவில் சரிந்தது. இந்நிலையில் டிசம்பர் காலாண்டில் ஏற்பட்ட வருவாய் பாதிப்பு திங்கட்கிழமை வர்த்தகத்தில் எதிரொலிக்கும், இதனால் ரிலையன்ஸ் பங்குகளின் சரிவு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான சரிவு இது தான் காரணம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருவாய் சரிவுக்கு முக்கியக் காரணம் இக்குழுமத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து இருந்து ஆண்டு இறுதி வரையிலும் மீள முடியவில்லை.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புப் பிரிவு மட்டும் 1.19 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்ற நிலையில் தற்போது 83,838 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே பெற்றுள்ளது.

வருமானத்தில் பெரும் சரிவு..
கச்சா எண்ணெய் முதல் டெலிகாம் வரையில் பல துறையில் வர்த்தகம் செய்யும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2019 டிசம்பர் காலாண்டு முடிவில் 1,60,447 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற்ற நிலையில், 2020 டிசம்பர் காலாண்டில் 1,28,450 கோடி ரூபாய் அளவிலான வருவாய் மட்டுமே பெற்றுள்ளது. இது கிட்டதட்ட 22 சதவீதம் குறைவாகும்.

லாபம் உயர்வு
மேலும் கடந்த நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 11,640 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த ஆண்டு 13,101 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 12.5 சதவீதம் அதிகம் என்றாலும் இந்நிறுவனத்தின் ஆஸ்தான வர்த்தகமான கச்சா எண்ணெய் பிரிவின் வர்த்தகம் இன்னும் சரிவில் இருந்து முழுமையாக மீளவில்லை.

50000 வேலைவாய்ப்பு
2020ல் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு இன்னும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐ விடாமல் துரத்தும் நிலையிலும் 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரிலையன்ஸ் சுமார் 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதில் பெரும் பகுதி வேலைவாய்ப்புகள் ரிடைல் வர்த்தகத்திலும், டெலிவரி பிரிவிலும் உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ஜியோ 3,489 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 15.5 சதவீத அதிக லாபமாகும். இதேபோல் ஜியோ பிரிவின் வருவாய் அளவுகள் 5.3 சதவீதம் வளர்ச்சி அடைந்து 19.475 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ரீடைல்
2020ல் மிகப்பெரிய வர்த்தகமாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் ரீடைல் செப்டம்பர் காலாண்டை விடவும் சுமார் 88 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் லாபம் 1,830 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.