இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலுவை கட்டணம், ஸ்பெக்ட்ரம் ஏலம் எனப் பல்வேறு காரணங்களுக்காக டெலிகாம் சேவை கட்டணங்களை உயர்த்த ஐடியா வோடபோன், ஏர்டெல் மற்றும் ஜியோ முடிவு செய்திருந்த நிலையில், இந்த முடிவில் இருந்து ஜியோ தற்போது ஜகா வாங்கி, கட்டண உயர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் ஜியோ நிறுவனத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ள நிலையில், 2021 முதல் காலாண்டில் திட்டமிட்ட கட்டண உயர்வு முடிவு ஒத்துவைக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ
ஜியோ தளத்தில் வெளியேறும் வாடிக்கையாளர்கள் அல்லது ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கா ஜூன் காலாண்டில் 0.46 சதவீதமாக இருந்த நிலையில், இது செப்டம்பர் காலாண்டில் 1.69 சதவீதமாகவும், டிசம்பர் காலாண்டில் 1.63 சதவீதமாகவும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கட்டண உயர்வு முடிவு
தொடர்ந்து ஜியோ சேவையைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இதே வேளையில், கட்டண உயர்வு செய்வதன் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழக்க வேண்டி வரும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜியோ தனது கட்டண உயர்வு முடிவை ஒத்திவைத்துள்ளது.

ஜியோ நிறுவனத்தின் லாபம்
டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த லாபம் சுமார் 16 சதவீதம் உயர்ந்து 3,291 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேவேளையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருவாய் அளவு 6 சதவீதம் வளர்ச்சி அடைந்து 18,492 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
இதேபோல் இக்காலாண்டில் ஜியோ தளத்தில் புதிய வாடிக்கையாளர்களாக 52 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர், இதனால் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 410.8 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் மூலம் கிடைக்கும் சராசரி வருமானத்தின் அளவு 151 ரூபாயாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விரைவில் 5ஜி
உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் 5ஜி சேவை கொண்டு வருவதில் பல டெலிகாம் நிறுவனங்கள் முயற்சி செய்து வரும் நிலையில், ஜியோ தனது முதலீட்டு கூட்டணியின் தொழில்நுட்ப உதவியுடன் 2021ல் 5ஜி சேவைை கண்டிப்பாக கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ.

விவசாயிகள் போராட்டம்
ஜனவரி 26ஆம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உட்பட வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் இண்டர்நெட் சேவையை முடக்கினர். இதனால் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமாக டெலிகாம் வாடிக்கையாளர்கள் சரியான இணைப்பு இல்லாமல் தவிக்கும் நிலை உருவானது குறிப்பிடத்தக்கது.