இந்தியாவில் நெட் ஜீரோ அளவீட்டை விரைவில் அடைய வேண்டும் என்பதற்காக எரிபொருள் பயன்பாட்டு விகிதத்தை மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்தது.
ஆனால் இந்தத் திட்டம் உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற விளாடிமிர் புதின் முடிவின் மூலம் பெரும் தோல்வியை அடைந்தது.
மோடி அரசு அழைக்கும் 3 வெளிநாட்டு நிறுவனங்கள்.. எதற்கு தெரியுமா..?!

உக்ரைன் போர்
உக்ரைன் போருக்கு முன்பு பெட்ரோல், டீசல் விடவும் இயற்கை எரிவாயு விலை சற்று குறைவாகவும் அதிக நன்மை அளிக்கக் கூடியதாகவும் இருந்தது. இதனால் மோடி தலைமையிலான மத்திய அரசு வீட்டில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரில் இருந்து அனைத்து வாகனங்களுக்கான எரிபொருள் வரையில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்த முடிவு செய்தது.

காற்று மாசுபாடு
2020ல் அதிக காற்று மாசுபாடு கொண்ட நாடுகள் பட்டியில் இந்தியா 9வது இடத்தில் இருந்தது. இந்த நிலையை மாற்றும் ஒரு முயற்சியாக இந்தியாவின் எனர்ஜி மிக்ஸ்-ல் இயற்கை எரிவாயு பயன்பாட்டு அளவை தற்போதைய 7 சதவீதத்தில் இருந்து 2030க்குல் 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இயற்கை எரிவாயு கார்பன் உமிழ்வு இல்லாமல் இல்லை, ஆனால் டீசலை விட குறைவாகும்.

சிட்டி கேஸ் திட்டம்
இதற்காக மத்திய அரசு சிட்டி கேஸ் திட்டத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து ஜனவரி மாதம் அதானி டோட்டல் கேஸ் முதல் பல முன்னணி நிறுவனங்கள் எரிவாயு விநியோக திட்டத்தைக் கைப்பற்றியது. ஆனால் பிப்ரவரி மாதம் விளாடிமிர் புதினின் போர் காரணமாக இயற்கை எரிவாயு விலை அதிகரித்து, விநியோகம் பாதித்துத் தற்போது இத்திட்டம் தோல்வி அடையும் நிலைக்கு வந்துள்ளது.

இயற்கை எரிவாயு பயன்பாடு
பைப் வாயிலாக இயற்கை எரிவாயு அளிப்பது மூலம் நகரத்து மக்களுக்குத் தடையில்லா எரிவாயு கிடைப்பதுமட்டும் அல்லாமல் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு அதிகப்படியான சிலிண்டர் சப்ளை கிடைக்கும். இதன் மூலம் கிராம மக்கள் மரக்கட்டைகள், சானம், மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக் குறைக்க முடியும்.

சிஎன்ஜி வாகனங்கள்
இதோடு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்குச் சிஎன்ஜி பயன்படுத்தப்படும் நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும். மேலும் இயற்கை எரிவாயுவை அரசு எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

இயற்கை எரிவாயு விலை
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவுக்கு ஒரு மில்லியன் Btu-க்கு 2.9 டாலரும், ஆழ்கடல் பகுதியில் உற்பத்தி எரிவாயு 6.1 டாலராக உள்ளது. ஆனால் அரசின் விலை நிர்ணயத்தில் பல பிரச்சனை இருப்பதால் உள்நாட்டில் உற்பத்தி குறைத்து வெளிநாட்டில் இருந்து 8-10 டாலருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

உக்ரைன் போர்
தற்போது உக்ரைன் போர் மூலம் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளது, போதுமான இயற்கை எரிவாயுவும் கிடைக்காமல் உள்ளது. இதனால் மோடியின் மலிவு விலை எரிவாயு சப்ளை திட்டம் கிட்டதட்ட தோல்வி அடைந்துள்ளதாகத் தற்போது பார்க்கப்படுகிறது. இயற்கை எரிவாயு விலை மீண்டும் ஜனவரி மாத விலையான 3.5 டாலருக்கு குறைந்தால் மோடி அரசின் கனவு திட்டம் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது.