இந்தியாவில் கணிசமான அளவு வேலை வாய்ப்பினை கொடுத்து வரும் ஐடி துறையானது, கடந்த சில ஆண்டுகளாக துரிதமான வளர்ச்சியினை கண்டு வருகின்றது.
வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி, பணியமர்த்தல் விகிதம், சம்பள உயர்வு, பணி உயர்வு, பல புதிய ஒப்பந்தங்கள் என பெரும் பரபரப்பாக செயல்பட்டு வந்தன.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் ஓராண்டிலேயே இருமுறை சம்பள உயர்வு. அதுவும் இரு இலக்கங்களில் அதிகரிப்பு என களை கட்டி வந்தது. ஐடி துறையில் நிலவி வரும் இந்த போக்கானது இன்னும் சில காலாண்டுகளுக்கு இப்படி தொடரலாம் என்றே இத்துறை சார்ந்த ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய இந்தியா முடிவு.. புதிய திட்டம் தீட்டும் ஆர்பிஐ..!

ஐடி துறையினர் அச்சம்
ஆனால் உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கும், மோதல்களுக்கும் மத்தியில், இதெல்லாம் மீண்டும் நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக விரிவாக்கம் செய்து வருவது ஐரோப்பிய நாடுகளில் தான்.

பெரும் பதற்றம்
தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றமானது சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றத்தினையும், அச்சத்தினையும் உருவாக்கியுள்ளது. இதனால் ஐடி துறையில் மட்டும் அல்ல, சங்கிலி தொடராக ஒவ்வொரு துறையிலுமே தாக்கம் ஏற்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது.

ஐரோப்பிய நாடுகள்
கடந்த காலங்களில் இந்திய ஐடி நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையினை பார்க்கும்போது, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அதிக வாடிக்கையாளார்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் அங்கு நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்திய ஐடி துறையானது தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். இந்தியா ஐடி நிறுவனங்களின் ஒட்டுமொத்த வணிகத்தில் 25% ஐரோப்பிய நாடுகளில் இருந்து தான் வந்துள்ளது.

மேற்கு ஐரோப்பாவில் விரிவாக்கம்
இருப்பினும் பிசினஸ் டுடேவில் வெளியான அறிக்கையின் படி, மேற்கண்ட மொத்த வணிகத்தில் 90% மேற்கு ஐரோப்பாவில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளது. இங்கு தங்களது இருப்பினை நிறுவனங்கள் தொடர்ந்து விரிவாக்கமும் செய்ய ஆரம்பித்துள்ளன. இது மட்டும் அல்ல தங்களது இருப்பினை வலுப்படுத்திக் கொள்ள கிழக்கு ஐரோப்பாவில் சில கையகப்படுத்தல்களையும் ஐடி நிறுவனங்கள் செய்துள்ளன.

ஒப்பந்தங்கள் குறையலாம்
இது குறிப்பாக வங்கித்துறை, ஆட்டோமோட்டிவ், ஆயில் & எனர்ஜி, பயன்பாட்டு துறை என பலவற்றிலும் வலுப்படுத்த தொடங்கியுள்ளன. எனினும் தற்போது அங்கு நிலவி வரும் அசாதரணமான நிலைக்கு மத்தியில், புதிய ஒப்பந்தங்களின் எண்ணிக்கையானது குறையலாம். இதனால் குறுகிய காலத்திற்கு ஐடி துறையில் சற்று தாக்கம் இருக்கலாம். ஒப்பந்தங்கள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் தற்போதைய நிலை?
ஐரோப்பிய நாடுகளில் எங்கு எந்த நிறுவனம் உள்ளது, வாருங்கள் பார்க்கலாம்.
உக்ரைன் - Globallogic
ரஷ்யா - இன்ஃபோசிஸ்
பெலாரஸ் - டெக் மகேந்திரா
போலந்து - LTTS, காக்னிசண்ட், ஹெச்.சி.எல் டெக், விப்ரோ, டிசிஎஸ், டெக் மகேந்திரா
ஹங்கேரி - ஹெச்.சி.எல் டெக், காக்னிசண்ட், டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா
செக் குடியரசு - இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா,ஹெச்.சி.எல் டெக்
குரோஷியா - இன்ஃபோசிஸ், Globallogic
லாட்வியா - டெக் மகேந்திரா,இன்ஃபோசிஸ், காக்னிசண்ட்
லூதியானா - காக்னிசண்ட், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக்
பல்கேரியா - இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா,ஹெச்.சி.எல் டெக்
ஸ்லோவாக்கியா - இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, Globallogic

எதிர்காலத்தில் பிரச்சனை
தற்போது நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களில் தாக்கம் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். ஏனெனில் நிறுவனங்கள் தற்போதைய நெருக்கடியான நிலையில், பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிசிஎஸ்
இது குறித்து டிசிஎஸ் எங்களது அலுவலகம் உக்ரைனில் இல்லை, எனினும் எங்களது ஊழியர்களின் குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். ஆக நாங்கள் அக்கறையுடன் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவினை கொடுத்து வருகின்றோம்.

ஹெச்.சி.எல் டெக்
ஹெச்.சி.எல் டெக் நிறுவனம் ஐரோப்பாவில் முன்னிலையில் இல்லையென்றாலும், வளர்ச்சியினை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அப்பகுதியை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எங்களது ஆதரவினை வழங்கி வருகின்றோம் என கூறியுள்ளன. எனினும் இன்ஃபோசிஸ், விப்ரோ, அசென்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

பணியமர்த்தலில் தாக்கம் இருக்கலாம்
உக்ரைன், போலந்து மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் அவுட்சோர்சிங் செய்வதற்கு கவர்ச்சிகரமான மாற்றாக மாறி வருகின்றன. எனினும் தற்போது நிலவி வரும் போர் பதற்றத்தால் வணிகங்கள் மீதான தாக்கம், ஐடி துறையிலும் எதிரொலிக்கலாம். இது கூடுதல் பணியமர்த்தல் திட்டங்களில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

அவுட்சோர்சிங் பணிகள் அதிகரிக்கலாம்
எப்படியிருப்பினும் சர்வதேச அளவில் ஐடி துறையில் அதிகரிக்கும் தேவைக்கு மத்தியில், இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் பணிகள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக தேவை அதிகரிக்கலாம். உக்ரைனில் ஐடி துறையானது 2021ல் 6 பில்லியன் டாலர் வருவாயை பெற்றன. மேலும் 2025ல் இது 16 பில்லியன் டாலராக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.