சனிக்கிழமை மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து லிட்டருக்கும் சுமார் 3 ரூபாய் வரையில் உயர்த்தப்படும் என்ற அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் செய்திகளை விடவும் வேகமாக நாட்டு மக்கள் மத்தியில் பரவியது.
இந்த அறிவிப்புக்குப் பின் சமுக வலைத்தளத்தில் மக்கள் தாறுமாறான கருத்துக்களைப் பதிவிட்டுத் தங்கள் ஆதங்கத்தைத் தீர்த்து வந்துகொண்டு இருக்கும் இந்த வேளையில் ஒரு முக்கியமான விஷயம் நமக்குக் கிடைத்துள்ளது.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள கலால் வரியால் மக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லையாம்.
அதாவது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி உயர்வின் மூலம் பெட்ரோல் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கலால் வரி
மத்திய அரசு அறிவித்துள்ளபடி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் வரையில் அதிகரிக்கும். இந்த வரி உயர்வினால் மத்திய அரசுக்கு 39,000 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானம் கிடைக்கும்.

ரீடைல் விலை
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கலால் வரி உயர்வு பெட்ரோல், டீசலின் விற்பனை விலையில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதற்கு முக்கியக் காரணம் அரசு எண்ணெய் நிறுவனங்கள் தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை சரிவையை ஏற்றுக்கொண்டு இந்த வரி விதிப்பின் விலையைச் சரி செய்துகொள்ளும் என இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அதாவது கொள்முதல் விலையில் ஏற்பட்டுள்ள சரிவைக் கலால் வரி உயர்வைச் சரி செய்துகொள்ளும் என அந்த அதிகாரி கூறுகிறார்.

விற்பனை நிறுவனங்கள்
அதிகாரிகள் என்ன சொன்னாலும் விற்பனை நிறுவனங்கள் முடிவு தான் இறுதி. இந்த விலை உயர்வை ஏற்க மனமில்லாமல் மக்கள் மீது திணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. முடிவு திங்கட்கிழமை தெரியும்.

மறைமுக வரித் துறை
தற்போது மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் மீதான சிறப்புக் கலால் வரி 2 ரூபாய் அதிகரித்து 8 ரூபாயாகவும், டீசல் மீதான கலால் வரி 2 ரூபாய் அதிகரித்து 4 ரூபாயாகவும் உள்ளது.
இதோடு கூடுதல் சாலை வரி (Road Cess) என்ற வகையில் 1 ரூபாய் எனப் பெர்ரோல் மற்றும் டீசல் மீது 10 ரூபாய் அளவிலான வரி விதிக்கப்பட்டுள்ளது.

மொத்த வரி
இந்நிலையில் பெட்ரோல் மீதான மொத்த கலால் வரியின் 22.98 ரூபாய், அதுவே டீசல் மீது 18.83 ரூபாய். மோடி அரசின் ஆட்சிக்கு முன்பு இதே பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு 9.48 ரூபாயாகவும், டீசல் மீது 3.56 ரூபாயாகவும் இருந்தது.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வின் மூலம் நடப்பு நிதியாண்டு முடிய உள்ள 3 வாரக் காலத்தில் மட்டும் மத்திய அரசுக்குக் கூடுதலாக 2000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மக்கள் கோபம்
கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் குறைந்துகொண்டு இருக்கும் போது இந்தியாவில் மட்டும் மக்கள் இந்தப் பலன் அனுபவிக்காத வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை காய்கறி விலை, பால், மளிகை பொருட்கள் என மக்களின் அன்றாடம் தேவையைப் பூர்த்தி செய்யும் அனைத்து பொருட்களின் மீதும் சார்ந்து இருப்பதால் இந்த வரி உயர்வு கண்டிப்பாக மக்களைப் பாதிக்கும்.