இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை அளித்து வரும் ஓலா வெறும் போக்குவரத்து நிறுவனமாக மட்டும் இருக்கக் கூடாது என முடிவு செய்து சில வருடங்களுக்கு முன்பாக ஆம்ஸ்டர்டாம் நாட்டைச் சேர்ந்த ஒரு எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனத்தைக் கைப்பற்றியது.
இந்த நிறுவனத்தை அடித்தளமாக வைத்து ஓலா நிறுவனம் எலான் மஸ்க்-ன் டெஸ்லா நிறுவனத்தைப் போன்று எலக்ட்ரிக் வாகனங்களை மலிவு விலையில் தயாரிக்கும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்து, அதற்கான பணிகளைப் படு தீவிரமாகச் செய்து வருகிறார் ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால்.

ஓலா பவிஷ் அகர்வால்
இந்த மாபெரும் திட்டத்திற்காக ஓலா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பியூச்சர்பேக்ட்ரி-ஐ உருவாக்கும் பணிகளைத் துவங்கி வைத்துள்ளார் பவிஷ் அகர்வால். இந்தியாவில் இருக்கும் பிற எலக்டரிக் வாகன நிறுவனங்களைப் போல் அல்லாமல் டெஸ்லா-வின் வழித்தடத்தில் பயணிக்க முடிவு செய்துள்ளது ஓலா எலக்ட்ரிக்.

மாபெரும் தொழிற்சாலை
இந்தியாவில் தற்போது முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார், எலக்ட்ரிக் பைக் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், இவர்களுக்குப் போட்டியாக ஓலா எலக்ட்ரிக் இன்ஜினியரிங், உற்பத்தி, விநியோகம் என அனைத்தும் ஒரே இடத்தில் செய்யும் படி இந்தத் தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது.

எலக்ட்ரிக் பைக் டூ எலக்ட்ரிக் கார்
இந்தப் புதிய தொழிற்சாலையில் முதற்கட்டமாக எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பணிகளை 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் துவங்க உள்ளது. இதேவேளையில் சிறிய ரக எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் திட்டத்தை விரைவில் துவங்க உள்ளதாகவும் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

1 கோடி வாகனங்கள் தயாரிப்பு
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைய உள்ள பியூச்சர் பேக்டரி-யில் வருடத்திற்கு 10 மில்லியன் அதாவது வருடத்திற்கு 1 கோடி வாகனங்களைத் தயாரிக்கும் அளவிற்கு மேம்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ஜூன் மாத உற்பத்தி துவங்கப்படும் தொழிற்சாலை சுமார் 43 ஏக்கர் பரப்பளவில் அமைப்பட்டு வருடத்திற்கு 20 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளது.

பேட்டரி தொழிற்சாலை
இதுமட்டும் அல்லாமல் இந்தத் தொழிற்சாலையில் தனியாகப் பேட்டரி தொழிற்சாலையும், 50 விற்பனையாளர்களின் தொழிற்சாலைகள் 240 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதனால் வாகன தயாரிப்பு தேவையான 90 சதவீத பொருட்கள் இந்தத் தொழிற்சாலையிலேயே பெறப்படுகிறது.

3000 ரோபோ
இந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான 20 மின்சாரம் கூரை மேல் நிறுவப்படும் சோலார் பேனல் வாயிலாகப் பெற உள்ளது ஓலா, இதேபோல் 3000க்கும் அதிகமான தொழிற்சாலை ரோபோ-க்களை உற்பத்தியில் அமைக்கப்படும் காரணத்தால் தயாரிப்புப் பணிகள் மிகவும் வேகமாக நடக்கும் என ஓலா எலர்ட்ரிக் தெரிவித்துள்ளது.

10,000 பேருக்கு வேலை
இந்நிலையில் 500 ஏக்கர் நிலத்தில் நிறுவப்படும் பிரம்மாண்ட தொழிற்சாலையின் மொத்த திட்டத்தத்தைச் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் செயல்படுத்தவும், இதன் மூலம் 10000 பேருக்கு நேரடியாகத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பை அளிக்க முடியும் என இந்நிறுவனம் நம்புகிறது.