ஸ்மாட்ர்போன் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்பிளஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவருமான கார்ல் பே புதிதாக ஒரு கன்ஸ்யூமர் டெக்னாலஜி நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தை எதைத் தயாரிக்கப் போகிறது, என்ன உருவாக்கப் போகிறது என இதுவரை முழுமையாகத் தெரிவிக்காத நிலையிலும் சுமார் 7 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைப் பெற்றுள்ளது.
எலான் மஸ்க் போரிங் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை உருவாக்கும் போது இருந்தே அதே பரபரப்பு ஒன்பிளஸ் கார்ல் பே துவங்கிய புதிய நிறுவனத்திற்கும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கார்ல் பே துவங்கிய புதிய நிறுவனத்தின் பெயர் 'Nothing'.
We rethought everything and came up with #Nothing. pic.twitter.com/VSz905Kgug
— Nothing (@nothingtech) January 27, 2021
2021ல் முதல் பாதியில் சில முக்கிய ஸ்மார்ட் கருவிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ள கார்ல் பே சமீபத்தில் ஒரு போட்டியில் ஆடியோ தொழில்நுட்பம் தொடர்புடைய கருவிகளை வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இந்தப் புதிய Nothing tech நிறுவனத்திற்கு ஐபாட்-ஐ உருவாக்கிய டோனி பேடெல், டிவிச் துணை நிறுவனர் கெவின் லின், ரெட்டிட் தலைவர் ஸ்டீவ் எனப் பல முன்னணி நிறுவன தலைவர்கள் மிகவும் ஆர்வமுடன் முதலீடு செய்துள்ளனர்.
இதனால் ஸ்டார்ட்அப் சந்தையில் இப்புதிய நிறுவனம் டிரென்டிங் ஆக உள்ளது. இந்நிறுவனத்தில் இந்தியாவின் பிரபலமான கிரெடிட் கார்டு பேமெண்ட் சேவை நிறுவனமான கிரெட் தலைவர் குனால் ஷாவும் முதலீடு செய்துள்ளார்.
உலகளவில் ஒன்பிளஸ் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு மற்றும் நம்பிக்கையைப் பெற்று உள்ள நிலையில் டிவி, ஹெட்போன் எனப் பல புதிய பொருட்களை அறிமுகம் செய்து சிறப்பான வளர்ச்சியில் இருக்கும் போது ஒன்பிளஸ் நிறுவனத்தை விட்டு 2020 அக்டோபர் மாதம் வெளியேறினார்.