இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் சேவை நிறுவனமான பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான நிதியியல் சேவைகளையும் டிஜிட்டல் முறையில் ஓரே இடத்தில் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு முதலீட்டுச் சேவை அளிப்பதற்காகப் பேடிஎம் மணி என்னும் புதிய தளத்தைத் துவங்கியது
இப்புதிய பேடிஎம் தளத்தில் மியூச்சுவல் பண்ட், என்பிஎஸ், பங்குச்சந்தை முதலீட்டு சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் மணி தளத்திற்குப் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் புதிதாக ஐபிஓ முதலீட்டு சேவையை அறிமுகம் செய்துள்ளது.
வெறும் 60 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ.. பர்கர் கிங்-ல் முதலீடு செய்யலாமா? வேண்டாமா?

பர்கர் கிங்
டிசம்பர் 2ஆம் தேதி பர்கர் கிங் துவங்கி அடுத்தடுத்து பல நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட ஆர்வம் காட்டி வரும் நிலையில் பேடிஎம் மணி இப்புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

விஜய் சேகர் சர்மா
இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் வலிமையான யூனிகார்ன் நிறுவனமாகத் திகழும் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் சர்மா, தொடர்ந்து புதுபுது வர்த்தகத்தை அறிமுகம் செய்து மக்கள் தனது டிஜிட்டல் நிதியியல் உலகிற்குள் இழத்து வருகிறார் என்றால் மிகையில்லை.

யூபிஐ பேமெண்ட் முறை
இந்நிலையில் ஐபிஓ முதலீட்டு சேவையை அறிமுகம் செய்து ரீடைல் முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ளது பேடிஎம் மணி. இப்புதிய சேவையின் மூலம் பல கோடி இளம் முதலீட்டாளர்களைப் பேடிஎம் ஈர்க்க முடியும். ஐபிஓ முதலீட்டை வாடிக்கையாளர்களின் யூபிஐ ஐடி வாயிலாகவே செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

இதர ஐபிஓ சேவைகள்
இதுமட்டும் அல்லாமல் ஐபிஓ முதலீட்டில் மாற்றம் செய்வது, ரத்துச் செய்வது, மறு விண்ணப்பம் செய்வது போன்ற அனைத்து சேவைகளும் பேடிஎம் மணி தளத்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதோடு பேடிஎம் மணி முதலீட்டாளர்கள் அடுத்த வரும் ஐபிஓ, பழைய ஐபிஓ-வின் பர்ஃபாமென்ஸ் ஆகியவற்றையும் பார்க்க முடியும்.

போட்டி நிறுவனங்கள்
பேடிஎம் மணி தற்போது ஜிரோதா, இந்த்மணி, க்ரோ, மற்றும் பங்கு தரகு நிறுவனங்களுடன் போட்டி போட்டு வருகிறது. பேடிஎம் மணி சேவையின் அறிமுகம் இத்துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஜிரோதா-விற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது

இலக்கு
பேடிஎம் மணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்புதிய ஐபிஓ முதலீட்டு சேவை மூலம் முதல் வருடத்தில் சந்தையில் குவியும் ஐபிஓ விண்ணப்பத்தில் 8 முதல் 10 சதவீத விண்ணப்பங்களைத் தனது தளத்தின் மூலம் அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

ஜனவரி 2020
பேடிஎம் நிறுவனத்தின் பங்குச்சந்தை முதலீட்டு சேவை அளிக்கச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி ஜனவரி 2020ல் ஒப்புதல் கொடுத்த நிலையில் ஜூலை 2020ல் பேடிஎம் தனது புதிய பேடிஎம் மணி சேவையை அறிமுகம் செய்தது.