இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் நாட்டின் பணவீக்கத்தின் அளவும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
பொதுவாக இந்திய போக்குவரத்துத் துறையில் இருக்கும் 90 சதவீத வாகனங்கள் டீசலை நம்பியிருக்கும் காரணத்தால் டீசல் விலையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு போக்குவரத்துக் கட்டணம் மற்றும் செலவுகளை அதிகரித்துள்ளது.

சிறு போக்குவரத்து நிறுவனங்கள்
நாட்டின் பெரும் போக்குவரத்து நிறுவனங்கள் டீசல் விலை உயர்வு மூலம் ஏற்பட்டு வரும் பாதிப்புகளைக் கடந்து போகும் நிலையில், சிறு மற்றும் குறு போக்குவரத்து நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை அடைவது மட்டும் அல்லாமல் போக்குவரத்து சேவை மற்றும் வர்த்தகத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இந்தியக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் இருந்து அதாவது இந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கிய வேளையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் உயர்த்தியுள்ளது.

அரசு வரி விதிப்பு
இந்த விலை உயர்வு பெருமளவில் மத்திய அரசு வரி வருமானத்தை அதிகமாகப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டு உயர்த்திய கலால் வரியால் ஏற்பட்ட உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதற்குப் பல மாநிலங்கள் தங்களின் மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்துள்ளது.

டெல்லி விலை நிலவரம்
இதன் மூலம் இந்தியாவில் பல பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்திருக்கும் நிலையில் டெல்லியில் சாதாரணப் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 91.17 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் டீசல் விலை ஒரு லிட்டர் 88.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபட்ட மதிப்புக் கூட்டு வரியின் காரணமாக விலை மாறுபடுகிறது.

முக்கியத் துறை வர்த்தகம்
போக்குவரத்துத் துறையில் பயணிகளாக இருந்தாலும் சரி, சரக்குப் போக்குவரத்தாக இருந்தாலும் சரி டீசல் விலை உயர்வு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் டெலிகாம் துறை டீசல்-ஐ பயன்படுத்தித் தான் தனது டெலிகாம் டவர்களைத் தடையில்லாமல் இயக்கி வருகிறது.
இப்படிப் போக்குவரத்துத் துறை, டெலிகாம் துறை மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்
போக்குவரத்துச் செலவுகள் அதிகமாகும் போது இந்த உயர்வை நிறுவனங்கள் வேறு வழி இல்லாமல் வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் மீது தான் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். இதன் பொருட்களின் விலை, சேவைகளின் கட்டணம் என அனைத்தும் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் என்பது உறுதி.

சரக்கு லாரியின் கட்டணங்கள்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சரக்கு லாரியின் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாகப் பிப்ரவரி மாதம் மட்டும் இதன் விலை 6 முதல் 8 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகத் தொகை
இதனால் போக்குவரத்தில் ஈடுபட்டு உள்ள பொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்கள் அதிகத் தொகை கொடுத்துப் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.