சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் OPEC அமைப்பு நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து அதன் விலையை உயர்த்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரத் துவங்கியது, இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து, லாக்டவுன் அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக ஜனவரி 15ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை சரிய துவங்கியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
இதையடுத்து இந்தியாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையைத் தினசரி மாற்றி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை இதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், சர்வதேச சந்தை நிலையைக் கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை
எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவால் இன்று நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மாறாமல் நேற்றைய விலை அப்படியே தொடர்கிறது. இதன் அடிப்படையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் 87.40 ரூபாயாகவும், டெல்லியில் 84.70 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 86.15 ரூபாயாகவும், மும்பையில் 91.32 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது

டீசல் விலை நிலவரம்
இதேபோல் டீசல் விலை சென்னையில் 80.19 ரூபாயாகவும், டெல்லி, 74.88 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 78.47 ரூபாயாகவும், மும்பையில் 81.60 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரத்தில் டீசல் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு போக்குவரத்து நிறுவனங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை.

விலை நிலவரம்
இந்தியாவில் கடந்த 5 நாட்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல நாட்கள் நிலையாக விலை மாறாமல் இருந்தது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில் பெரும்பாலான நகரங்களில் உச்ச விலையை அடைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம்
OPEC அமைப்பில் இருக்கும் நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒன்றுகூடி முடிவு செய்துள்ளதன் வாயிலாக ஜனவரி 4ஆம் தேதி முதல் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாகப் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 57 டாலர் வரையில் உயரத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.