தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி தொகுப்பினை அறிவித்துள்ளது.
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்டப் இந்தியா திட்டம் கடந்த 2016ல் தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட 5 ஆண்டுகள் முடிவடைந்ததையடுத்து, பிராரம்ப் : ஸ்டார்டப் இந்தியா என்ற சர்வதேச மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடந்தது.
சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா?

நிதி ஒதுக்கீடு
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்தகைய நிறுவனங்களுக்கு, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக 1000 கோடி ரூபாய் நிதித் தொகுப்பு ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் தொழில் முனைவோரை
ஊக்கப்படுத்துவதோடு, புதிய கண்டுபிடிப்புகளையும் இது ஊக்கப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

பெரிய நிறுவனங்களாக உருவெடுக்கும்
சிறிய அளவில் தொடங்கப்படும் நிறுவனங்கள் பெரிய அளவில் மாற இது வழிவகுக்கும். அதோடு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிப்பதோடு மட்டும் அல்லாமல், இது இந்திய பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும். நாட்டில் புதிய நிறுவனங்கள் பெரு நகரங்களில் மட்டுமே தொடங்கப்படுவதில்லை. சுமார் 40 சதவீத புதிய தொழில் நிறுவனங்கள், இரண்டாவது மற்றும் மூன்றாம் அடுக்குகளில் தொடங்கப்படுகின்றன.

இந்தியாவின் நம்பிக்கை
கொரோனாவின் நெருக்கடியான காலகட்டங்களில் பெரிய பெரிய நிறுவனங்கள் கூட, தங்களது வருங்கால நிலை பற்றி கவலையடைந்தன. ஆனால் ஸ்டார்டப் நிறுவனங்கள் தான் பெரும் நம்பிக்கையை கொடுத்தன. இது அந்த சமயத்தில் இந்தியாவுக்கு ஒரு உந்துதலாக இருந்தன. உலக அளவில் இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் ஸ்டார்டப்புகள் உருவாகியுள்ளன. மொத்தம் சுமார் 41,000-க்கும் அதிகமாக ஸ்டார்டப்கள் உள்ளன.

வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம்
மொத்தம் 41,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்டப்களில் ஐடி துறையில் மட்டும் 5700 ஸ்டார்டப்புகளும், ஹெல்த்கேர் துறையில் 3600 ஸ்டார்டப்புகளும், விவசாயத் துறையில் 1700 ஸ்டார்டப்புகளும் ஈடுபட்டுள்ளன. ஆக மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் ஸ்டார்டப்கள் இந்தியாவில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. ஆக இதுபோன்ற ஊக்குவிப்புகள் இன்னும் வேலை வாய்ப்புகளை உருவாக்க பயன்படும் எனலாம்.