இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் சக்திகாந்த தாஸ்-ன் கவர்னர் பதவி காலம் 3 ஆண்டுக் காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2024ஆம் ஆண்டு வரையில் சக்திகாந்த தாஸ் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பார்.
ஆர்பிஐ-யின் கொள்கைகள் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவின.. சக்திகாந்த தாஸ் பளிச்..!

உர்ஜித் பட்டேல்
உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்த பின்பு 25வது கவர்னராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற நிலையில், இவருடைய பதவி காலம் வருகிற டிசம்பர் 10, 2021 உடன் முடிவடைகிறது. இதனால் அடுத்தக் கவர்னர் தேடுவது கட்டாயமாகியுள்ளது.

பதவி காலம் நீட்டிப்பு
சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய அரசுக்கு மத்தியிலான உறவு பிற கவர்னர்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் காரணத்தால் இரு தரப்பு ஒப்புதல் அடிப்படையில் மீண்டும் கவர்னர் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமனத்தின் நியமன குழு
இவருடைய நியமனத்தை நாடாளுமனத்தின் நியமன குழு ஒப்புதல் அளித்து டிசம்பர் 10, 2021-க்குப் பின் மூன்று ஆண்டுக் காலம் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில் சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் கவர்னராகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி
தமிழ்நாட்டுப் பிரிவில் 1980ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியேற்கும் முன் பொருளாதார விவகாரத் துறையின் செயலாளராக இருந்தார். இந்நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீரென ராஜினாமா செய்த நிலையில், சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.

பல முக்கியப் பிரச்சனைகள்
சக்திகாந்த தாஸ் அவர்களின் பணிக்காலத்தில் பல முக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவானது என்றால் மிகையில்லை, கொரோனா தொற்றால் பொருளாதாரம் வரலாற்றுச் சரிவு, வங்கி திவால், வங்கி நிர்வாகம், வங்கியில் நிதி உட்செலுத்தல், வங்கி கொள்கை வடிவமைப்பு, சீரமைப்பு எனப் பல சவால்கள் நிறைந்துள்ளது.

முக்கியப் பொறுப்பு
சக்திகாந்த தாஸ் தலைமையில் தான் ரெப்போ விகிதத்தைப் பெரிய அளவில் குறைக்கப்பட்டு, கொரோனா காலத்தில் மக்களுக்கு மோரோடோரியம் அளித்துப் பெரும் வாய்ப்பை கொடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வரும் முக்கியமான பொறுப்பு அடுத்த 3 வருடத்தில் உள்ளது.