இந்தியாவில் பணப்புழக்கத்தை மொத்தமாக மாற்றப்போகும் டிஜிட்டல் கரன்சியை உருவாக்க உள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
இந்திய ரிசர்வ் வங்கி உலக நாடுகளுக்கு இணையாக ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில், தற்போது ரீடைல் மற்றும் ஹோல்சேல் கணக்குகளுக்குத் தனித்தனி டிஜிட்டல் கரன்சி (CBDC) உருவாக்க முடிவு செய்துள்ளது ஆர்பிஐ.
இதில் எந்தக் கரன்சி முதலில் தயாராகிறதோ, அதை முதலில் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

ரபி சங்கர்
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரான டி ரபி சங்கர் கூறுகையில், ஹோல்சேல் சந்தைக்கான டிஜிட்டல் கரன்சிக்கான பணிகளைக் கிட்டதட்ட முடிந்தது, ஆனால் ரீடைல் கரன்சியை உருவாக்குவது சற்றுக் கடினமாக இருக்கும் காரணத்தால் கூடுதலாகக் காலம் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மோசடி
மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி (CBDC) என்பது காகிதத்தில் இருக்கும் ரூபாயை டிஜிட்டல் முறையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது தான். இதில் டிஜிட்டல் மோசடி செய்ய அதிக வாய்ப்பு இருக்கும் காரணத்தால் அனைத்து பிரச்சனைகளையும் களையும் ஒரு தளத்தை உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியமாக விளங்குகிறது என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரான டி ரபி சங்கர் கூறுகிறார்.

சக்திகாந்த தாஸ்
எப்படிப் பணப்புழக்கத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வருகிறதோ, டிஜிட்டல் கரன்சியில் பல மோசடிகள் நடக்க வாய்ப்பு உள்ளது, இதைத் தடுக்கும் வகையில் Firewall உருவாக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

காகித நாணயங்கள்
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி உருவாக்கி பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது மூலம் காகித நாணயங்களை நம்பியிருக்கும் தேவையில்லை, பரிமாற்ற கட்டணம் குறைவாக இருக்கும் காரணத்தால் அரசிடம் அதிகமான ஆதிக்கம் இருக்கும், செட்டில்மென்ட் ரிக்ஸ் பெரிய அளவில் குறையும்.

கருப்புப் பணம், வரி ஏய்ப்பு
அனைத்திற்கும் மேலாகப் பணபுழக்கத்தை முறையாகக் கண்காணிக்க முடியும், பணத் திருட்டு அளவுகள் குறையும், கருப்புப் பணம் உருவாக்குவதைக் குறைக்க முடியும், அதேவேளையில் வரி ஏய்ப்பு அளவை பெரிய அளவில் குறைக்க முடியும். இந்த டிஜிட்டல் கரன்சியில் பல ஆபத்துகள் இருந்தாலும், பல நன்மைகளும் உள்ளது.