இந்தியாவின் பணவீக்க பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஆர்பிஐ எப்போதும் இல்லாத வகையில் தனது நாணய கொள்கை கூட்டத்திற்கு மாறாகத் திடீரென வட்டி விகிதத்தை உயர்த்தியது.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி 4.40% ஆகவும், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான சிஆர்ஆர் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.50% அதிகரித்துச் சந்தை பணப் புழக்கத்தில் இருந்து சுமார் 87000 கோடி ரூபாய் திரும்பப் பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 2018க்கு பின்பு முதல் முறையாக வட்டியை உயர்த்தியுள்ளது.
ஆனால் இந்த வட்டி உயர்வு மிகவும் தாமதமான நடவடிக்கை எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
வட்டி விகிதத்தினை அதிகரித்த கோடக் மகேந்திரா வங்கி.. புதிய விகிதங்கள் இதோ!

இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் கடந்த இரண்டு வருடங்களாக மோசமாக இருக்கும் நிலையிலும் ரிசர்வ் வங்கி எவ்விதமான முன் ஏற்பாடும் இல்லாமல் ஏப்ரல் 7ஆம் தேதி கூட்டத்தில் கூட வட்டியை உயர்த்தாமல் இருந்தது. இதனால் விலைவாசி உயர்ந்து பொருளாதார வளர்ச்சியில் பெரும் சுமை உருவாகியுள்ளது.

தாமதம்
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வட்டி உயர்ந்தும் அறிவிப்பு வெளியிட்ட போது "தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்க அழுத்தங்களைக் குறைக்கவும், பொருளாதாரத்தில் சப்ளை பாதிப்புகளின் விளைவுகள் கட்டுப்படுத்தப்படுத்த ஆர்பிஐ உறுதிசெய்யச் செய்து வட்டியை உயர்த்தியுள்ளதாக" கூறி தாமதத்தை ஒப்புக்கொண்டார்.

நுகர்வோர் விலை குறியீட்டு
நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் பல மாதங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மாதங்களில் சராசரி விகிதம் 5.8% என்பது அதிர்ச்சி அளிக்கும் அளவீடாக உள்ளது. மார்ச் மாதத்தில், இது ரிசர்வ் வங்கியின் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிகமாக 6.95% ஆக உள்ளது, ஏப்ரல் அளவீடும் அதிகமாக இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

பிரிட்டன்
வியாழக்கிழமை இங்கிலாந்து பொருளாதாரம் 2023 இல் சரியும் கணித்து வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியது. இதோடு 2022ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் எனப் பேங்க் ஆப் இங்கிலாந்து கணித்துள்ளது.

அமெரிக்கா
புதன்கிழமை அமெரிக்க மத்திய வங்கி தனது நாணய கொள்கையில் 50 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. இது 22 ஆண்டுகளில் மிகப்பெரிய உயர்வாகும். மேலும் அடுத்த இரண்டு நாணய கொள்கை கூட்டத்தில் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வட்டியை உயர்த்தும் திட்டம் கையில் உள்ளது எனவும் ஜெரோம் பவல் கூறினார்.

இந்தியா
கொரோனா தொற்று நேரத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாகச் சூழ்நிலை உருவாக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி மார்ச் 27, 2020ல் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்தது, இதைத் தொடர்ந்து மே 22, 2020ல் கூடுதலாக 40 அடிப்படை புள்ளிகள் குறைத்து வெறும் 4 சதவீதமாக ரெப்போ விகிதத்தை நிர்ணயம் செய்தது.

வட்டி உயர்வுக்கு வாய்ப்பு
இந்நிலையில் தற்போது ஆர்பிஐ 0.40 சதவீத வட்டியை உயர்த்திய நிலையில் அடுத்தடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் 0.75 சதவீதம் அளவிலான வட்டியை உயர்த்திப் பழைய நிலைக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வர திட்டமிடுவதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.