வங்கிகளில் வழங்கப்படும் லாக்கர் வசதி குறித்து ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.
அதன்படி வாடிக்கையாளரின் பொருட்களில் வங்கி ஊழியர்களால் மோசடி நடக்கும் பட்சத்தில், அல்லது தீ விபத்து அல்லது வங்கி கட்டடம் இடிந்து விழுந்து பாதுகாப்பு பெட்டகம் சேதமடைந்தாலும் இழப்பீடு வேண்டும்.
இந்த இழப்பீடானது ஓராண்டு வாடகையை போல 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கிகள் வழங்க வேண்டும் என அறிவித்தது.
கார்டு மேல இருக்கும் 16 நம்பர் இனி தேவையில்லை.. ஆர்பிஐ புதிய உத்தரவு, ஜனவரி 1 முதல் அமல்..!

அபாயமான பொருட்கள் கூடாது
வங்கி லாக்கரில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது. என்பதை வாடிக்கையாளர் உடனான ஒப்பந்தப் பத்திரத்தில் வங்கிகள் சேர்க்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. ஆக இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பான பொருட்களை பாதுகாப்பாக வங்கிகளில் மறைத்து வைப்பது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

காலியான லாக்கர் எவ்வளவு?
வங்கிகள் அவற்றின் கிளை வாரியாக காலியாக உள்ள லாக்கர் குறித்த விவரங்களை வெளிப்படையாக, அவற்றின் வலைதளத்தில் வெளியிட வேண்டும். அதோடு லாக்கர் கிடைக்காத வாடிக்கையாளருக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்க வேண்டும். வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகப் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும்.

இயற்கை பேரிடரா?
மேலும் வங்கிகள் நில நடுக்கம், வெள்ளம், மின்னல், புயல் போன்ற இயற்கை சீற்றத்தாலோ அல்லது வாடிக்கையாளரின் அலட்சியத்தினாலோ லாக்கரில் உள்ள பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தாவிடில்?
லாக்கர் வாடகைக்கு 3 ஆண்டுகள் டெர்ம் டெபாட்சிட்டினை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். எனினும் இது தற்போது பாதுகாப்பு பெட்டகத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாதுகாப்பு பெட்டக வாடகை செலுத்த தவறினால் அந்த பெட்டகத்தை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது.

செய்தியாக வெளியிட வேண்டும்
வங்கி இணைப்பு அல்லது வங்கி கிளை வேறு இடத்திற்கு மாற்றம், வங்கி கிளை மூடல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு நிகழ்வு இருந்தால், வங்கிகள் அதனை உள்ளூர் செய்தித்தாள் உள்பட, இரண்டு செய்தித்தாள்களில் அறிவிப்பு செய்ய வேண்டும். இது குறைந்தது இரு மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட வேண்டும்.

சிசிடிவி அவசியம்
லாக்கர்களை பாதுகாக்க வங்கிகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 180 நாட்கள் வரையிலான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைத்திருப்பது அவசியம்.

யாருக்கு லாக்கர்
புதிய வழிகாட்டுதல்களின் படி, வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் லாக்கர் வசதிக்கு விண்ணப்பித்தவர்களின், CDD விதிமுறைகளுடன் முழுமையாக இணங்குவோருக்கு லாக்கர் வசதியை வழங்கலாம். ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், வங்கி தொடர்பு இல்லாத பிற வாடிக்கையாளர்களுக்கும் லாக்கர் வசதியை வழங்க முடியும்.

எப்போது அமல்?
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்புகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள மற்றும் புதிய லாக்கர்களுக்கு இந்த விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கட்டணங்கள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.