இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு நீண்ட காலமாகத் திட்டமிட்டு இந்தியாவில் இருக்கும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரியைத் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
ஆனால் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு சுமார் 350 பொருட்களுக்கான சுங்க வரியைக் குறைத்தும், விலக்கும் அளித்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் திட்டம் என்ன..? உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்கு மாறியுள்ளதா..?
பட்ஜெட் 2022ல் யாருக்கெல்லாம் வெற்றி.. யாருக்கெல்லாம் தோல்வி..!

சுங்க வரிக் குறைப்பு
பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 350க்கும் அதிகமான பொருட்களுக்குச் சுங்க வரி படிப்படியாகக் குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். வரி விலக்கு அளிக்கப்படும் பட்டியலில் விவசாயப் பொருட்கள், இரசாயனங்கள், துணிகள், மருத்துவச் சாதனங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவையும் அடக்கம்.

இறக்குமதி பொருட்கள்
இதேபோல் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் பல உதிரிப்பாகங்கள், மூலப்பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளது.

இந்திய உற்பத்தி
மேலும் வரி குறைக்கப்பட்ட பல பொருட்கள் மீது இதுநாள் வரையில் அதிகப்படியான வரி விதிக்கப்பட்டு வந்தது. இதோடு வரி குறைக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கேப்பிடல் குட்ஸ் சந்தை
தற்போது செய்யப்பட்ட சுங்க வரி மாற்றத்தின் மூலம் நாட்டின் கேப்பிடல் குட்ஸ் சந்தைக்குச் சாதகமாகவே உள்ளது. மேலும் நாட்டின் உற்பத்தி அளவீட்டை 2025க்குள் இரட்டிப்பு வளர்ச்சி அடைய இந்த மாற்றம் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7.5 சதவீத வரி
இதேபோல் நிலக்கரி சுரங்க திட்டங்கள், மின்சாரத் திட்டங்கள், ரயில்வே, மற்றும் மெட்ரோ திட்டங்களுக்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு அதிகப்படியான வாய்ப்பு அளிக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்குச் சுங்க வரி 7.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

MSME நிறுவனங்கள்
மேலும் தற்போது குறைக்கப்பட்டு உள்ள வரிக் குறைப்புகள் MSME நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உதாரணமாக ஸ்டீல் ஸ்கிராப் மீதான சுங்க வரிக் குறைப்பு அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், இது 2ஆம் தர ஸ்டீல் உற்பத்தியாளர்கள் குறிப்பாக MSME பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பலன் அளிக்கும்.

வரி உயர்வு
தற்போது மத்திய அரசின் முடிவின் படி உற்பத்திக்குப் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரியைக் குறைத்துவிட்டு, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படும்.

படிப்படியாகக் குறையும்
இந்த வரிக் குறைப்புப் படிப்படியாக மட்டுமே குறைக்கப்படும் என்பதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிக்கப் போதுமான கால அவகாசம் கிடைக்கும். மேலும் இந்த வரிக் குறைப்பு இந்தியாவின் உற்பத்தியைக் கட்டாயம் உயர்த்தும் என நம்புகிறது மோடி அரசு.