முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020ஆம் ஆண்டில் மிகப்பெரிய வர்த்தக விரிவாக்கத்தையும், முதலீட்டையும் பெற்றுள்ளது.
எவ்விதமான முன் அறிவிப்புமின்றி ரகசியமாகத் திட்டமிட்டு மிகவும் குறைந்த காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
இதேவேளையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பேஸ்புக், கூகுள், குவால்கம், இன்டெல் என உலகின் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்த காரணத்தால் 2020ல் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது மட்டும் அல்லாமல் உலக நாடுகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் ஜியோ பிரபலமாகியுள்ளது.
இந்தப் பரபரப்பு மிகுந்த காலகட்டத்திலும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் முனைப்பாய் இருந்த நிலையில் பல நிறுவனங்களில் முதலீடு செய்து வர்த்தகத்தைக் கைப்பற்றியுள்ளது.
சீனாவின் பலே திட்டம்.. இந்தியாவின் அதிரடி கட்டுப்பாடு.. 130 முதலீட்டு விண்ணப்பம்..!

அர்பன் லேடர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனம் தனது ஆன்லைன் ரீடைல் சந்தையில் பர்னீச்சர் வர்த்தகத்தை அறிமுகம் செய்ய அர்பன் லேடர் ஹோம் டெக்கார் நிறுவனத்தின் 96 சதவீத பங்குகளை 182.12 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது. இதோடு வர்த்தக வளர்ச்சிக்காக 75 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் முடிவு செய்துள்ளது

அமெரிக்க நிறுவனம்
இதேபோல் பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் Breakthrough Energy Ventures II, நிறுவனத்தில் சுமார் 50 மில்லியன் டாலர் அளவிலான தொகையை அடுத்த 8 முதல் 10 வருட காலத்தில் பல பகுதிகளாக முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனை
ஜியோமார்ட் அறிமுகத்திற்குப் பின் ஆன்லைன் மருந்து விற்பனையில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வாயிலாக ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான மெட்பிளஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான விடாலிக் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளையும், தனது 4 கிளை நிறுவனங்களில் 100 சதவீ பங்குகளையும் சுமார் 620 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளது.

100% பங்குகளைக் கைப்பற்றத் திட்டம்
இதன் மூலம் விடாலிக் ஹெல்த் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ள நிலையில் 2024ஆம் ஆண்டுக்குள் 80 சதவீத பங்குகளையும், வர்த்தகச் சூழ்நிலையைப் பொருத்து 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்தது.

ஸ்ரீ கண்ணன் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்
ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தைத் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யும் பொருட்டுத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஸ்ரீ கண்ணன் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் 152.5 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் ரீடைல் மிகப்பெரிய அளவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ சாவன்
மார்ச் 2018ல் Saavan நிறுவனத்தின் 83.5 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய ரிலையன்ஸ், 2020 பிப்ரவரி மாதம் கூடுதலாக 10.9 சதவீத பங்குகளைக் கைப்பற்றிச் சாவன் நிறுவனத்தில் தனது பங்கு இருப்பை 94.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது ரிலையன்ஸ்.

பியூச்சர் 101
ரிலையன்ஸ் ரீடைல் தனது ஆடை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் ஆடம்பர ஆடை வடிவமைப்பு நிறுவனமான Future 101 Design Private Limited நிறுவனத்தில் 2 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்நிறுவனத்தின் 2.5 சதவீத பங்குகளைக் கைபற்றி மொத்த பங்கு இருப்பு அளவு 17.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது ரீலையன்ஸ் பிரான்ஸ் லிமிடெட்

அலோக் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020ல் அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 1 ரூபாய் முகமதிப்புக் கொண்ட 115,32,00,000 பங்குகளைக் கைபற்றி இந்நிறுவனத்தின் 40.01 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் JM Financial Asset Reconstruction Company Limited சுமார் 34.99 சதவீத பங்குகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SkyTran Inc
ஏப்ரல் மாதத்தில் ரிலையன்ஸ் தனது Reliance Strategic Business Ventures Limited நிறுவனத்தின் வாயிலாக அமெரிக்காவில் இயங்கும் SkyTran Inc நிறுவனத்தில் சுமார் 17.37 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் 2019ல் கைப்பற்றிய பங்குகளுடன் சேர்த்து இந்நிறுவனத்தின் 26.31 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் உடனான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகக் கைப்பற்றும் ஒப்பந்தம் இன்னும் நிறைவு பெறாத நிலையில் 2020ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்றிய நிறுவனங்களில் சேர்க்க முடியாது.
2020க்கு இது போதும்.. ரிலையன்ஸ் ஜியோ செய்த சிறப்பான காரியம்..!
வெறும் 10% பங்குகளுக்கு ரூ.47,265 கோடி முதலீடு.. ரிலையன்ஸ் ரீடைல் மாஸ்..!