ஒரு காலத்தில் மல்டி பில்லியனராக வலம் வந்த அனில் அம்பானி, தற்போது சட்ட செலவுகளுக்கே காசு இல்லை. மனைவியின் நகைகளை விற்று தான் செலவு செய்கிறேன். என்னிடம் ஒன்றுமில்லை என்று நீதிமன்றத்தில் கூறினார்.
உண்மையில் அனில் அம்பானியின் சாம்ராஜ்யம் சரிந்து இன்று தன்னிடம் சொத்து என்று சொல்ல ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவு அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது.

இருமடங்கு நிகரலாபம்
ரிலையன்ஸ் பவர் நிறுவனம், இரண்டாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகரலாபம் இருமடங்கு அதிகரித்து, 105.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 45.06 கோடி ரூபாயாக இருந்ததாக, இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வருவாய் அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் கடன் நிறைந்த ரிலையன்ஸ் எனர்ஜி ஜெனரேஷன் லிமிடெட் நிறுவனத்தின், மொத்த வருவாய் 2,626.49 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டில் 2,239.10 கோடி ரூபாயாக இருந்தது. குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 17.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடன் செலுத்தியுள்ளோம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் இருந்தாலும், நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் இந்த நிறுவனம் 884 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்ல இரண்டாவது காலாண்டில் 2,290 கோடி ரூபாய் கடனை அடைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு அதன் கடன் பங்கு விகிதத்தை மேலும் மேம்படுத்தும் என்று அது தெரிவித்துள்ளது.

பெருத்த கடன்
செப்டம்பர் 30, 2020 நிலவரப்படி, இந்த நிறுவனம் அதன் தற்போதைய சொத்து மதிப்புகளை விட, அதிகம் செலுத்த வேண்டிய நிலுவை உள்ளது. எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சில துணை நிறுவனங்களின் பிற சொத்துக்களை பணமாக்குவதன் மூலம், போதுமான மற்றும் சரியான நேரத்தில் பணப்புழக்கங்களை உருவாக்கலாம். அதன் மூலம் கடமைகளை பூர்த்தி செய்வதில் நம்பிக்கை உள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவைப் பொறுத்து பாதிப்பிருக்கும்
தற்போது கொரோனாவின் காரணமாக, நாட்டில் போடப்பட்ட லாக்டவுன் காரணமாக நாட்டில் மின்சார தேவை சற்று குறைந்துள்ளது. குறிப்பாக தொழிற்துறை மற்றும் வர்த்தக நுகர்வோரின் தேவை வெகுவாக குறைந்துள்ளது. எனினும் தற்போது மீண்டு வந்து கொண்டுள்ளது. மேலும் எதிர்கால முன்னேற்றங்களைப் பொறுத்து, கொரோனா தொற்று நோய் முடிவுகளை பாதிக்கும் என்றும் இந்த நிறுவனம் பாதித்துள்ளது.