இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரிவினரான HNI அதாவது அதிகச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் சமீப காலமாகத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிப் பிற நாடுகளில் குடியுரிமை பெற்று வருகின்றனர்.
இது மத்திய அரசுக்கு வரி வருமானம் குறைவது மட்டும் அல்லாமல் மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் பெறும் தடையாக உள்ளது.

புதிய மாற்றங்கள்
இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையை விடுத்து வெளிநாட்டில் குடியுரிமை பெறுவதைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

120 நாட்கள் மட்டுமே
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு NRI-கள் தங்களது குடியுரிமை நிலைநிறுத்த வேண்டும் என்றும், தங்களது வெளிநாட்டு வருமானத்திற்கு இந்தியாவில் வரி விதிக்க வேண்டும் என்று இந்தியாவில் தங்கும் காலத்தை 183 நாட்களில் இருந்து 120 நாட்களாகக் குறைத்தது.

சீனா - இந்தியா
2019ல் சீனாவுக்கு அடுத்தபடியாக தாய் நாட்டை விட்டுப் பிற நாடுகளுக்குக் குடியுரிமை பெற்ற மக்கள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தைப் பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 7000 பேர் இந்தியக் குடியுரிமையை விடுத்துப் பிற நாடுகளில் குடியுரிமையைப் பெற்றுள்ளனர், இதேபோல் கடந்த 5 வருடத்தில் மட்டும் 30000 முதல் 35000 பேர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

மார்ஜினல் ரேட் 42.74 சதவீதம்
இந்தியாவில் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு 30 சதவீதம் வருமான வரி விதிப்பதைத் தாண்டி 37 சதவீதம் சர்சார்ஜ் விதிக்கப்பட்டு மார்ஜினல் ரேட் 42.74 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளுக்கு இணையாக அல்லது நெருக்கிய அளவீட்டில் வரி விதிக்கப்படுவதன் மூலம் கட்டாயம் இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என நம்பப்படுகிறது.

மீண்டும் உயர்வு
மத்திய அரசு NRI-களுக்குகான கட் ஆப் நாட்களை 183ல் இருந்து 120 ஆகக் குறைக்க மிக முக்கியமான காரணம் அதிக ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டும் என்பதற்காகத் தான், ஆனால் தற்போது அடிப்படைக்கே பாதிப்பு உருவாகியிருக்கும் காரணத்தால் கட் ஆப் நாட்களை உயர்த்த திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.