இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மத்தியில் நடந்த தாக்குதலில் பல உயிர்கள் பறிபோன நிலையில், இந்தியா அரசு அண்டை நாடுகள் அதாவது இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் அனைத்து நாடுகளின் முதலீடுகளையும் அரசு ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்பு தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற முக்கியமான கட்டுப்பாட்டை விதித்தது.
இதன் மூலம் சீனாவில் இருந்து சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் தேக்கி வைத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஒப்புதல் அளிக்கத் துரித நடவடிக்கை எடுக்கும் முடிவிலும் மத்திய அரசு இல்லை.

சீன முதலீடு
இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சீன முதலீட்டில் தான் இயங்கி வருகிறது. குறிப்பாகப் பேடிஎம், சோமேட்டோ, உதான் போன்ற முன்னணி நிறுவனங்கள் அதீதமாகச் சீன முதலீட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சீனாவில் இருந்து வரும் புதிய முதலீடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
மத்திய அரசின் இப்புதிய கட்டுப்பாட்டின் காரணமாக ஆட்டோமேட்டிக் பிரிவில் இருக்கும் துறை சார்ந்த முதலீடுகளும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், முதலீட்டுத் தேவையில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், பிரிட்டன் முதலீட்டாளர்களை நாடி வருகிறது.

எல்லை பிரச்சனைக்கான தீர்வு
இந்நிலையில் சீன முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளும் தடையும் இந்தியச் சீன எல்லை பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்படும் எனக் கருத்து நிலவுகிறது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏற்கனவே சீன ராணுவத்திடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முழுமையான தீர்வு காணப்படாமல் உள்ளது.

சீன நிறுவனங்கள்
எல்லை பிரச்சனையைத் தொடர்ந்து இந்தியா சீன அரசு மீதும், சீன நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீன முதலீடுகள் மீது இந்தியா தடை விதித்துள்ள நிலையில், புதிதாகத் தொழில் துவங்க வரும் சீன நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

செயலிகள் தடை
இதுமட்டும் அல்லாமல் இந்திய டிஜிட்டல் சந்தையில் சீன சந்தைகள் பெருமளவிலான வர்த்தகத்தை வைத்திருந்த நிலையில் 200க்கும் அதிகமாகச் செயலிகளையும் முழுமையாகத் தடை செய்தது. இதனால் பல சீன நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தை மூடிவிட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு
2020ல் கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடு மூலம் இந்தியாவில் மோசமான வர்த்தக நிலைக்குத் தள்ளப்பட்ட இந்திய நிறுவனங்களைக் கைப்பற்றும் விதமாகச் சீன நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் திட்டமிட்டு இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யத் தயாரான நிலையில் மத்திய அரசு இந்த முதலீட்டுக் கட்டுப்பாடுகள் விதித்தது.

சீனாவின் நோக்கம்
இந்தியாவில் ஏப்ரல் 2000 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் சீனா, இந்தியாவில் முதலீடு செய்த மொத்த அன்னிய முதலீட்டின் அளவு வெறும் 15,526 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் 2020ஆம் ஆண்டில் கொரோனா பாதித்த 9 மாத காலகட்டத்தில் சீனா இந்தியாவில் 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய விண்ணப்பித்துள்ளது. இதில் இருந்தே சீனாவின் நோக்கும் புரிந்துவிட்டது.