ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 8 மில்லியன் (80 லட்சம்) உறுப்பினர்கள், கடந்த ஏப்ரல் 2020 தொடங்கி நான்கு மாத காலத்துக்குள் 30,000 கோடி ரூபாய் பிஎஃப் பணத்தை வெளியே எடுத்து இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 60 மில்லியன் (6 கோடி) சம்பளதாரர்கள் மற்றும் அவர்களுக்கு வேலை கொடுக்கும் கம்பெனிகளிடம் இருந்து, கட்டாய பங்களிப்புகள் வழியாக வசூலிக்கப்பட்ட 10 லட்சம் கோடி ரூபாய் கார்பஸ் தொகையை EPFO அமைப்பு நிர்வகிக்கிறது.
இந்த நிதி ஆண்டில் 30,000 கோடி ரூபாயை EPFO அமைப்பின் உறுப்பினர்கள் வெளியே எடுத்து இருப்பதால் 2020 - 21 நிதி ஆண்டில் ஈட்டும் வருவாய் பாதிக்கப்படலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்த அதிகாரிகள்.
EPFOவில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட பணத்தில், கிட்டத்தட்ட 3 மில்லியன் பயனாளிகள் கொரோனா வைரஸுக்காக அரசு கொடுத்த சிறப்புச் சலுகையின் கீழ் 8,000 கோடி ரூபாயை வெளியே எடுத்து இருக்கிறார்கள். மீதமுள்ள 22,000 கோடி ரூபாயை 5 மில்லியன் EPFO சந்தாதாரர்களால் பொதுவாக வெளியே எடுத்து இருக்கிறார்களாம். அதிலும் குறிப்பாக மருத்துவ காரணங்களைச் சொல்லி EPFO கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுத்து இருக்கிறார்களாம்.
இந்த கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில், இந்திய அரசு, நாடு தழுவிய லாக் டவுனை அறிவித்தது. அதே நேரத்தில் பிஎஃப் வாடிக்கையாளர்கள், தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுத்துக் கொள்ள, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலே சொன்னது போல 30,000 கோடி ரூபாயை, EPFO உறுப்பினர்கள் வெளியே எடுத்து இருப்பதன் விளைவாக, EPFO ஈட்டும் வருவாயில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விரிவான மைக்ரோ லெவல் அனாலிசிஸ்-க்குப் பின் தான் பார்க்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார்கள் அதிகாரிகள்.
தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே EPFO சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுப்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என ஒரு ஒரு அரசு உயர் அதிகாரியே சொல்லி இருக்கிறாராம்.
வரும் நாட்களில் சுமாராக 10 மில்லியன் (1 கோடி) வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்கலாம் என EPFO அமைப்பு கணித்து இருக்கிறது.