உக்ரைன் மீதான போர் காரணமாகப் பல நிறுவனங்கள் ரஷ்யா மீது தொடர்ந்து தடை விதித்து வரும் நிலையில் தற்போது சாம்சங் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரஷ்யாவின் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போவது மட்டும் அல்லாமல் சீனாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இது மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் சீனாவில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பாகத் தான் பார்க்கப்படுகிறது. சரி சாம்சங் அப்படி என்ன அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெரியுமா..?
நீங்க என்ன என்னை தடை பண்றது.. பிபிசி, பேஸ்புக், கூகுள் ப்ளே-க்கு தடை விதித்த ரஷ்ய அரசு!

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்
தென் கொரியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யாவிற்கு இனி எந்தொரு ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன்
மேலும் சாம்சங் ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான பிரச்சனை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை ஆய்வு செய்து உரிய முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆப்பிள்
ஏற்கனவே ஆப்பிள் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சேவை துறை நிறுவனங்களான கூகுள், இன்டெல், ஹெச்பி, மைக்ரோசாப்ட், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களும், நைகி, ஐகியா போன்ற நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களின் மற்ற பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யத் தடை விதித்துள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தை
ரஷ்ய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் சுமார் 30 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது, சியோமி 23 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு 2வது இடத்திலும், ஆப்பிள் 13 சதவீத சந்தையைக் கொண்டு 3வது இடத்திலும் உள்ளது.

சீன நிறுவனங்கள்
இதன் மூலம் சீன டெக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புத் தற்போது உருவாகியுள்ளது. குறிப்பாக ப்ரீமியம் பிரிவில் ஹூவாய் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.