இந்திய பங்குச்சந்தை பணவீக்கம், உக்ரைன் - ரஷ்யா போர், அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு, நாணய மதிப்புச் சரிவு எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் தடுமாறி வரும் நிலையில், இன்று 3 முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிரொலியாக ஆசிய சந்தையின் உதவியுடன் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று மார்ச் காலாண்டின் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தை அளித்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. பிக்சட் டெபாசிட் வட்டி அதிகரிப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
மார்ச் 31, 2022 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வெள்ளிக்கிழமை தனது நிதியியல் முடிவுகள் உடன் முதலீட்டாளர்களுக்கான ஈவுத்தொகை அறிவித்துள்ளது.

நிகர லாபம்
மார்ச் காலாண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் கடந்த ஆண்டை விடவும் 41.2 சதவீதம் (YoY) அதிகரித்து 9,113.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இக்காலக்கட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII) மற்றும் கடன் வர்த்தகத்தின் அளவு அதிகரித்துள்ளது.

லாப வளர்ச்சி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.6,451 கோடி லாபத்தையும், டிசம்பர் 2021 காலாண்டில் 8,432 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று இருந்தது. டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 8 சதவீதம் உயர்வுடன் 9,113.5 கோடி ரூபாய் லாபத்தை மார்ச் 2022 காலாண்டில் பெற்றுள்ளது.

ஈவுத்தொகை
எஸ்பிஐ வங்கியின் நிர்வாகக் குழு கூட்டம் 13 மே, 2022 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த நிதியாண்டில் ஒரு பங்கிற்கு 7.10 ரூபாயை ஈவுத்தொகையாகப் பங்குதாரர்களுக்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜூன் 10ஆம் தேதி
மேலும் இந்த ஈவுத்தொகையைச் செலுத்தும் தேதி ஜூன் 10, 2022 அன்று நிர்ணயிக்கப்பட்டது உள்ளது. இதனால் எஸ்பிஐ பங்குகளை வைத்திருக்கும் அனைத்து முதலீட்டாளர்களுக்கு ஜூன் 10ஆம் தேதி ஒரு பங்கிற்கு 7.10 ரூபாயை ஈவுத்தொகை தத்தம் கணக்கில் வைப்பு வைக்கப்படும்.

நிகர வட்டி வருமானம்
எஸ்பிஐ வங்கியின் முக்கிய வருமான ஆதாரமா விளங்கும் நிகர வட்டி வருமானம் மார்ச் காலாண்டில் காலாண்டில் 15.26 சதவீதம் உயர்ந்து ரூ. 31,198 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.27,067 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 1.6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

வாராக் கடன்
SBI இன் சொத்துத் தரம் கணிசமாக மார்ச் காலாண்டில் உயர்ந்துள்ளது, மொத்தச் செயல்படாத சொத்துக்கள் மதிப்பு (ஜிஎன்பிஏ) மார்ச் 2022 காலாண்டில் ரூ. 1.2 டிரில்லியனில் இருந்து ரூ. 1.12 டிரில்லியனாகச் சரிந்துள்ளது.
மேலும் நிகர வாராக் கடன், முந்தைய காலாண்டில் ரூ.34,540 கோடியிலிருந்து ரூ.27,966 கோடியாகச் சரிந்தது.

சந்தை கணிப்புகள்
நிகர லாபம் ஆண்டுக்கு 63-72 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்த்த நிலையில் மார்ச் காலாண்டில் இது ரூ.10,493 கோடிக்கும் ரூ.11,056.7 கோடிக்கும் இடையே வரும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 41.2 சதவீத உயர்வில் 9,113.5 கோடி ரூபாயை மட்டுமே பெற்றுள்ளது.

கடன் வர்த்தகம்
மார்ச் 31, 2022 இன் இறுதியில் எஸ்பிஐயின் கடன் வர்த்தகம் ரூ. 28.18 லட்சம் கோடியாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டின் 25.39 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 11 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
சில்லறை கடன் அளவுகள் 15.11 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது, அதே நேரத்தில் கார்பரேட் கடன்கள் 6.35 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி அடைந்துள்ளது.

எஸ்பிஐ பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.45 சதவீத உயர்வில் 2.10 ரூபாய் அதிகரித்து ஒரு பங்கு விலை 464.55 ரூபாயாக உயர்ந்துள்ளது. காலை வர்த்தகத்தில் எஸ்பிஐ பங்குகள் 477 ரூபாய் வரை உயர்ந்தது.
காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு எஸ்பிஐ பங்குகள் சரிவு.