இந்தியாவிலேயே அதிக வங்கிக் கிளைகளை வைத்திருப்பது தொடங்கி அதிக ஊழியர்கள் வேலை பார்க்கும் வங்கி, அதிகமாக கடன் கொடுத்திருக்கும் வங்கி... என பலவற்றில் எஸ்பிஐ தான் நம்பர் 1.
இப்படிப்பட்ட பெரிய அரசு வங்கியே, தற்போது ஒரு புதிய விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவிக்க இருப்பதாகச் பிசினஸ் லைன் வலைதளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எஸ்பிஐ அறிவிக்க இருக்கும் விருப்ப ஓய்வு திட்டத்தின் (VRS - Voluntary Retirement Scheme) பெயர் 'Second Innings Tap - Voluntary Retirement Scheme - 2020 (SITVRS-2020)' என்கிறது பிசினஸ் லைன்.

யார் விஆர்எஸ்-க்கு தகுதியானவர்கள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 25 வருடப் பணியை நிறைவு செய்தவர்கள், 55 வயதானவர்கள், தொடர்ந்து 3 முறை பணி உயர்வு வாய்ப்புகளை தவற விட்டவர்கள்... என சில அடிப்படை விஷயங்களை வைத்து தான் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்கிறார்களாம். இதில் புதிதாக எஸ்பிஐ உடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்களும் அடக்கம்.

எத்தனை ஊழியர்கள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், கடந்த மார்ச் 2020 நிலவரப்படி, மொத்தம் 2,49,448 பேர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ், 11,565 அதிகாரிகள் மற்றும் 18,625 பணியாளர்கள் என மொத்தம் 30,190 ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெறலாமாம்.

எவ்வளவு சேமிப்பு
இவர்களில் 30 சதவிகிதம் பேர் விருப்ப ஓய்வு பெற்றால் கூட, எஸ்பிஐ வங்கிக்கு சுமாராக 2,170 கோடி ரூபாய் செலவு குறையுமாம். கடந்த மார்ச் 2020 காலாண்டில் அனலிஸ்ட்களின் பிரசண்டேஷனில், எஸ்பிஐ வங்கி தன் செலவீனங்களைக் குறைத்து, உற்பத்தித் திறனைப் பெருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் யூனியன் தரப்பு
எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தின், இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என அனைத்து இந்திய எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே எஸ் கிருஷ்ணா சொல்லி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம். எத்தனை ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு வெளியேறுகிறார்கள் எனத் தெரிய வரும்.

எஸ்பிஐ தரப்பு
இந்த விருப்ப ஓய்வுத் திட்டம், ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கோ அல்லது செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளோ அல்ல எனத் தெளிவுபடுத்தி இருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் சுமார் 14,000 ஊழியர்களை புதிதாக வேலைக்கு எடுக்கும் திட்டம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ தரப்பு.
எப்போதுமே தன் ஊழியர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து வருகிறது எஸ்பிஐ. அந்த அடிப்படையில், ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் போதுமான வளர்ச்சி இல்லாமல் இருப்பது, வேறு ஊர்களுக்குச் செல்வதில் இருக்கும் சிக்கல், உடல் நலக் குறைவு, குடும்பப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால், வேறு வேலைகளுக்குச் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு, ஒரு நல்ல தீர்வு கொடுக்க வேண்டும் என்று தான் தான் இந்த திட்டமாம்.