இந்திய ரீடைல் சந்தையின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமான ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் இடையிலான வர்த்தகப் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் பியூச்சர் குரூப் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் முடங்கியது. அமேசானின் இந்த நடவடிக்கையால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சர் பங்குகளும் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.
இந்நிலையில் இந்தியச் சந்தை கட்டுப்பாடு ஆணையமான செபி ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப்-ன் 24,713 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது அமேசானுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
முதன் முறையாக 50,000 தொட்ட சென்செக்ஸ்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..!

ரிலையன்ஸ் - பியூச்சர் - அமேசான்
ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் மீது தடை விதிக்கக் கோரி அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் தடை உத்தரவு பெற்றதை தொடர்ந்து, அமேசான் கடந்த 3 மாதத்தில் அமேசான் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டாம் என்றும், ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்றும் சுமார் 8 முறை கடிதம் எழுதியுள்ளது.

செபியின் நிபந்தனைகள்
இந்நிலையில் செபி அமைப்பு ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது மட்டும் அல்லாமல், இந்த ஒப்பந்தம் குறித்துப் பல்வேறு நிபந்தனைகளையும், அமேசானின் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து ஒப்புதல் அளித்துள்ளது.

லாக் இன் பங்குகள்
குறிப்பாகப் பியூச்சர் குரூப் பங்குகளை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு மாற்றும் போது அதை லாக் இன் பங்குகளாகத் தான் பரிமாற்றம் செய்ய வேண்டும். மேலும் பரிமாற்றத்திற்குப் பின்பும் குறித்த காலத்திற்குப் பங்குகள் லாக் இன் பங்குகளாகத் தான் இருக்க வேண்டும் என முக்கியமான நிபந்தனையைச் செபி குறிப்பிட்டு செபி அமைப்பு ரிலையன்ஸ்- பியூச்சர் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்
இதேபோல் அமேசான் டிசம்பர் 21ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்குத் தடை உத்தரவைப் பெற்றது. இதையும் செபி குறிப்பிட்டு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமேசானுக்குப் பின்னடைவு
செபியின் ஒப்புதல் அமேசான் நிறுவனத்திற்கும் பெரும் பின்னடைவாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி ஒப்பந்தம் குறித்து மறு ஆய்வு செய்யச் செபியிடம் கோரிக்கை விடுத்த போது, அமேசான் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டு சிங்கப்பூர் நடுவர் அமைப்பின் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் காத்திருக்க வேண்டும் எனச் செபிக்கு கடிதம் எழுதியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை விற்பனை செய்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடாகப் பெற்றதைத் தொடர்ந்து தனது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு 45,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டை ஈர்த்த நிலையில், 2020 ஆகஸ்ட் மாதம் அதிகளவிலான நிதிநெருக்கடியில் இருக்கும் பியூச்சர் குரூப் வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்து ஒப்பந்தம் செய்தது.

ரூ.24,713 கோடி ஒப்பந்தம்
இந்த ஒப்பந்த படி பியூச்சர் குரூப் நிறுவனத்தின் ரீடைல், மொத்த விலை, லாஜிஸ்டிக்ஸ், கிடங்கு வர்த்தகம் என அனைத்தையும் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனம் சுமார் 24,713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கைப்பற்ற
ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் பெருமளவிலான வர்த்தகத்தை ரிலையன்ஸ் கைப்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது

வர்த்தக ஆதாரங்கள்
இந்தப் பரிமாற்றம் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் கடைகள் எண்ணிக்கை 18,000-தை தாண்ட உள்ளது. இதுமட்டும் அல்லாமல் கிடங்கு, மொத்தை விற்பனை வர்த்தகம், வினியோகஸ்தர்கள் ஆகியவற்றையும் ரிலையன்ஸ் கைப்பற்ற உள்ளது.
ஆன்லைன் மற்றும் ரீடைல் வர்த்தகத்தில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். கடைசியில் முகேஷ் அம்பானி சாதித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.