தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று தேசிய பங்குச்சந்தை முடங்கிய நிலையில் முதலீட்டாளர்களுக்குக் கூடுதலான வர்த்தகம் நேரம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 3.45 மணிக்கு வர்த்தகம் துவங்கப்பட்ட நிலையில் 5 மணி வரையில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதன் படி இன்றைய வர்த்தக முடிவில் காலை முதல் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்யப்பட்டாலும், 3.45 மணிக்கு மேல் துவங்கிய வர்த்தகத்தில் சிறப்பான வர்த்தக வளர்ச்சியை அடைந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 50,881.17 புள்ளிகளை அடைந்தது. ஆனால் வர்த்தக முடிவில் கணிசமாகச் சரிவடைந்து 1030.28 புள்ளிகள் உயர்வில் 50,781.69 புள்ளிகளை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இன்று மிகவும் மோசமாக 49,751 புள்ளிகளில் வர்த்தகத்தைத் துவங்கிய சென்செக்ஸ் 49,648.78 புள்ளிகள் வரை சரிந்து காணப்பட்டது.

நஷ்டம் அடைந்த நிறுவனங்கள்
இதேபோல் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று டாக்டர் ரெட்டி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டது. இதேபோல் ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா, என்டிபிசி, மாருதி, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான சரிவை அடைந்தது.

லாபம் அடைந்த நிறுவனங்கள்
இதைத்தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கி இன்று அதிகப்படியாக 5.04 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி ஆகியவை 3 முதல் 4 சதவீதம் அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டைப் போல் நிஃப்டி குறியீடு இன்று வர்த்தக முடிவில் 274.20 புள்ளிகள் உயர்ந்து 14,982.00 புள்ளிகளை அடைந்துள்ளது. 3.45 மணிக்குப் பின் தொடர் உயர்வில் இருந்து நிஃப்டி குறியீடு இன்று அதிகப்படியாக 15,008.80 புள்ளிகளை அடைந்தது.