எலான் மஸ்க் போட்ட ஒரு டிவீட்டால் மொத்த இண்டர்நெட் உலகமே தற்போது வாஸ்ட்அப்-ஐ வெறுக்கத் துவங்கியது மட்டும் அல்லாமல் சிக்னல் செயலிக்கு மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
வாட்ஸ்அப்-ன் புதிய ப்ரைவசி கொள்கை மக்கள் மத்தியில் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்த நிலையில், எலான் மஸ்க் டிவீட் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மக்கள் மட்டும் அல்லாமல் ஸ்டார்ட்அப் மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களும், தலைவர்களும் சிக்னல் செயலியைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
இதனால் வாட்ஸ்அப் பெரும் பின்னடைவைச் சந்திக்கத் துவங்கியுள்ளது.

வாட்ஸ்அப் பே அறிமுகம்
வாட்ஸ்அப் பே அறிமுகம் பேடிஎம் மற்றும் போன்பே நிறுவனத்தைக் கடுமையாகப் பாதிக்கத் துவங்கியுள்ள நிலையில், இவ்விரு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வாட்ஸ்அப்-ஐ அன்-இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இது சக டெக் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் ஒரு மாற்றத்திற்கு அஸ்திவாரம் அமைத்துள்ளது.

டாடா முதல் மஹிந்திரா வரை
ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத்தின் தலைவரான நவீன் ஜின்டால், மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா, டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் ஆகியோர் சிக்னல் செயலியைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
இதில் குறிப்பாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் பல மாதங்களாகத் தனது உயர்மட்ட நிர்வாகக் குழு உடன் பேசும் அனைத்து கருத்து பரிமாற்றங்களும் சிக்னல் செயலி வாயிலாகச் செய்வதாகத் தெரிகிறது.

ஸ்டார்ட்அப் தலைவர்கள்
இதேபோல் கிரெட் நிறுவனத்தின் குனால் ஷா, பேடிஎம் நிறுவனத்தின் விஜய் சேகர் ஷர்மா எனப் பல ஸ்டார்ட்அ பெரும் தலைகள் நேரடியாக வாட்ஸ்அப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சிக்னல் செயலிக்கு மாறுங்கள் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.
இது இந்திய ஸ்டார்ட்அப் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் Vs சிக்னல்
இதற்கிடையில் வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் செயலிகளில் வாடிக்கையாளரின் தகவல் பரிமாற்றம் எண்ணிக்கையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டு உள்ளது. டிசம்பர் 23-31 வரையிலான காலகட்டத்தில் வெறும் 14,000 தகவல்கள் மட்டுமே பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ள நிலையில், ஜனவரி 1 முதல் 9 வரையிலான காலத்தில் 18 லட்சம் குறுஞ்செய்திகள் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது வாட்ஸ்அப்ல் 34 லட்சத்தில் இருந்து 30 லட்சமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.