முன்னாள் ராணுவ ஊழியரின் உயிரை ஸ்விக்கி டெலிவரி ஊழியர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் போக்கு பெருகி வருகின்றது. ஆண்கள் பெண்கள் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் நேரமின்மையால் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் நிலை உள்ளது.
இப்படியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தான் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியினை காட்டி வருகின்றன.
ரிலையன்ஸூக்கு பலத்த இழப்பு.. 9 நிறுவனங்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.3 லட்சம் கோடி நஷ்டம்..!

உணவு டெலிவரி
முன்னதாக மெட்ரோ நகரங்களில் மட்டுமே அதிகளவில் உணவு டெலிவரி இருந்து வந்த நிலையில், தற்போது டயர் 2 நகரங்களிலும் விரிவாக்கம் செய்து வருகின்றன. மக்களும் இதனை விரும்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களின் சேவையானது பெரும் உதவிகரமாக இருந்தது எனலாம்.

இது தான் சவால்
கேட்ட நேரத்தில் விரும்பிய ஹோட்டல்களில் பிடித்தமான உணவுகளை டெலிவரி செய்வதே இவர்களின் முக்கிய பணியாக இருந்து வருகின்றது. சொல்லப்போனால் இந்த டெலிவரி ஊழியர்களுக்கு இருக்கும் முக்கிய சவாலே சரியான நேரத்தில் டெலிவரி செய்வது தான். ஏனெனில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கும் மத்தியில் சரியான நேரத்தில் செல்வது மிகப்பெரிய சவால் தான்.

மனிதாபிமானம்
ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும் மனிதாபிமானம் தழைத்திருக்கிறது என்பது தான் மகிழ்ச்சியளிக்க கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் இந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அப்படி என்ன சம்பவம் அது, இதற்கும் ஸ்விக்கிக்கும் என்ன சம்பந்தம். வாருங்கள் பார்க்கலாம்.

கடுமையான நெரிசல்
மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான கர்னல் மோகன் மாலிக் என்பவருக்கு, கடந்த டிசம்பர் 25ம் தேதியன்று உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது மகன் உதவியுடன் மும்பை பாந்திராவில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் செல்லும் வழி முழுவதும் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்து வந்துள்ளது. சிறிது தூரம் கூட செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.

கொஞ்சம் வழி விடுங்களேன்
அந்த சமயத்தில் மாலிக்கின் மகன், அங்கிருந்த இரு சக்கர வாகன ஒட்டிகளிடன் கொஞ்சம் வழி விட்டால், எனது தந்தையை காப்பாற்றிவிடலாம் என கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் ஒருவரும் உதவிக்கு வரவில்லை என தெரிகிறது. அந்த நெருக்கடியான நேரத்தில் தான் ஸ்விக்கி ஊழியரான மிருனாள் கிர்தத் உதவி செய்ய முன் வந்துள்ளார்.

உடனடியாக சிகிச்சை அளியுங்கள்
அங்கிருந்தவர்களை சத்தம் போட்டு அங்கிருந்த வாகனங்களை அகற்ற உதவி புரிந்துள்ளார். அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை, மருத்துவமனை வரை சென்று, மருத்துவமனை ஊழியர்களிடம் மாலிக்கின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் கூறியுள்ளார்.

நிஜத்திலும் Saviour
மிருனாளின் இந்த உதவியின் காரணமாக சில வாரங்களுக்கு பிறகு அவரின் உடல் நிலை தேறியுள்ளார். இந்த நிலையில் தான் தனது உயிரை காப்பற்றிய இளைஞரை பற்றி மனம் திறந்துள்ளார். எனக்கு வாழ்வளித்த அந்த இளைஞரை பற்றி தான் என்னால் நினைக்க முடிந்தது. என்னை பொறுத்தவரையில் ஸ்விக்கி அவர்களை அழைப்பது போல, நிஜத்திலும் அவர் Saviour தான்.

நன்றி
அவர் மட்டும் இல்லை எனில், எனது அன்பு குடும்பத்தினரிடம் ஒரு போதும் திரும்ப வந்திருக்க முடியாது. ஆக அவருக்கும் அவரை போன்ற டெலிவரி ஊழியர்களுக்கும் நன்றிகள் என மாலிக் கூறியுள்ளார். இதனை ஸ்விக்கி இந்தியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது.