இன்று காலை 11 மணிக்குத் தமிழக அரசு தனது இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையை 11வது முறையாக இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு 2 வருடங்களுக்கு முன்பு அறிவித்த ஒரு சிறப்புத் திட்டத்தைத் தமிழக அரசும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவிலான நன்மைக் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் பிப்ரவரி 2019ல் பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்திய விவசாயிகள் பலன் அடையும் வகையில் பிரதான் மந்திரி சமன் நிதி என்னும் பிஎம் கிஸ்சான் திட்டம் மூலம் ஆண்டுக்கு 6000 ரூபாய் அளவிலான வருமானத்தை அளிக்கும் திட்டத்தை அறிவித்தது.
இதேபோன்ற திட்டம் இந்த இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்படும் எனக் கருத்து நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் பல லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாயக் குடும்பங்கள் அதிகளவிலான பலன் பெறுவார்கள்.
இதேபோல் இந்தியாவில் பல மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கும் வகையில் மாநில அரசு விதிக்கும் வாட் வரியை குறைத்து வரும் நிலையில், தமிழக அரசு இன்று தாக்கல் செய்ய உள்ள இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.