இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் நுகர்வோர் வர்த்தகப் பிரிவான டாடா கன்ஸ்யூமர் கடந்த சில மாதத்திற்குப் பின்பு மிகப்பெரிய வர்த்தக இணைப்பு செய்யப்பட்டு மறுசீரமைப்பு செய்தது. இதன் மூலம் இந்தியாவில் வேகமாக வளரும் நுகர்வோர் நிறுவனங்கள் மத்தியில் முக்கியப் போட்டியாளராகக் களமிறங்கியது டாடா கன்ஸ்யூமர்.
இந்நிலையில் தற்போது டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் லிமிடெட் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 81 சதவீத லாப வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்தியாவின் சினிமா தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் & பொழுதுபோக்கு கம்பெனி பங்குகள் விவரம்!

அதிரடி லாப வளர்ச்சி
கடந்த வருடம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் லிமிடெட் வெறும் 190 கோடி ரூபாயை மொத்த லாபமாகப் பெற்ற நிலையில், நடப்பு நிதியாண்டில் மொத்த லாபத்தின் அளவு 81.78 சதவீதம் வளர்ச்சி அடைந்து சுமார் 345.55 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
இதேபோல் இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வருமானத்தின் அளவும் 13.44 சதவீதம் வளர்ச்சி அடைந்து 2,713.91 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

பிராண்ட் மதிப்பு
டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வர்த்தக முறை மாற்றி அமைக்கப்பட்ட சில மாதங்களில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்து வருவாய் 13 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், சந்தையில் டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு அதிகரித்துள்ளதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

டாடா ஸ்டார்க்பக்ஸ்
2021ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா காரணமாக டாடா ஸ்டார்க்பக்ஸ் நிறுவனத்தின் வருவாய் அதிகளவில் குறைந்துள்ளது. இக்காலகட்டத்தில் சுமாப் 60 சதவீதம் ஸ்டார்பக்ஸ் கடைகள் மூடப்பட்டு வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

பங்கு மதிப்பு
டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் லாப அறிவிப்பின் எதிரொலியாக இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் 4 சதவீதம் வரையில் உயர்ந்தது. ஆனால் வர்த்தக முடிவில் 0.39 சதவீதம் வரையில் சரிவை எதிர்கொண்டது டாடா கன்ஸ்யூமர் பங்குகள்.
இன்றைய வர்த்தக வளர்ச்சியின் மூலம் டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனப் பங்குகள் 471.70 ரூபாய் வரையில் உயர்ந்து இன்று 52 வார உயர்வைப் பதிவு செய்தது.

முக்கிய வர்த்தக
டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது டி, காபி, தண்ணீர், உப்பு, பருப்பு வகைகள், மசாலா வகைகள் மற்றும் பாக்கெட் உணவுகள் முக்கிய வர்த்தகப் பொருளாக இருப்பதால், இந்தியாவில் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையில் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியும். இதேபோல் வெளிநாட்டு வர்த்தகத்தில் டாடா குழுமத்திற்கு மிகப்பெரிய நெட்வொர்க் மற்றும் அடித்தளம் இருப்பதால் வெளிநாட்டிற்கு TCPL வர்த்தகத்தை எளிதாக விரிவாக்கம் செய்ய முடியும்.

FMCG துறை
இந்தியாவில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக நுகர்வோர் சந்தை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் FMCG துறை பெரு நிறுவனங்களுக்கு முக்கிய இலக்காக மாறியுள்ளது.
இதன் எதிரொலியாக நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான டாடா, FMCG துறையில் பெரிய அளவிலான வர்த்தகத்தை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு ஒரு முக்கியமான முடிவை எடுத்து நுகர்வோர் பொருட்களின் வர்த்தகத்தை ஒன்றாக இணைந்து தற்போது தனி நிறுவனமாக இயங்கி வருகிறது.