இந்தியாவில் அழகு சாதன பொருட்களின் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், டாடா குழுமம் 23 வருடத்திற்கு முன்பு இத்துறை வர்த்தகத்தில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் இறங்க முடிவு செய்துள்ளது மற்றும், புதிய வர்த்தக இலக்குடன் பிரம்மாண்டாகச் சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
டாடா குழுமம் ஏற்கனவே பல வர்த்தகத் துறையில் டிஜிட்டல் விற்பனை சேவையைத் துவங்கியுள்ளது மட்டும் அல்லாமல் சூப்பர் ஆப் உருவாக்கும் பணியிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் வாயிலாக டாடா குருப் மீண்டும் அழகு சாதன பொருட்கள் விற்பனை துறையில் இறங்க புதிய திட்டம் தீட்டி வருகிறது.

டிரென்ட் நிறுவனம்
டாடா குழுமத்தின் ரீடைல் பிரிவான டிரென்ட் நிறுவனத்தின் தலைவரான நோயல் டாடா இனி காலணிகள் மற்றும் உள்ளாடைகளுடன் அழகு சாதன பொருட்களுக்கும் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த உள்ளோம். புதிய தயாரிப்புகளையும், புதிய வடிவத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

நோயல் டாடா
நோயல் டாடா-வின் தாய் சிமோன் டாடா 1953லேயே இந்தியாவில் உருவாக்கப்பட்ட அழகு சாதனை பொருட்களை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக Lakme என்ற பெயரில் இந்தியாவின் முதல் அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தை உருவாக்கினார்.

Lakme தொழிற்சாலை
ஆனால் பல்வேறு காரணங்களுக்காகவும், அன்றைய காலகட்டத்தில் வர்த்தகம் பெரிய அளவில் இல்லாத காரணத்தாலும் Lakme தொழிற்சாலையை யூனிலீவர் நிறுவனத்திற்கு 1998ஆம் ஆண்டு டாடா குரூப் விற்பனை செய்தது.

23 வருடத்திற்குப் பின்
டாடா குழுமம் 2014ல் மீண்டும் இத்துறையில் சிறிய அளவில் வர்த்தகத்தைத் துவங்கினாலும் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யவில்லை, இந்நிலையில் 23 வருடத்திற்குப் பின் டாடா மீண்டும் காஸ்மெட்டிக்ஸ் மற்றும் பியூட்டி சந்தைக்குள் மிகப்பெரிய திட்டத்துடன் இறங்கியுள்ளது.

காஸ்மெட்டிக்ஸ் மற்றும் பியூட்டி
இந்தியாவின் காஸ்மெட்டிக்ஸ் மற்றும் பியூட்டி மார்கெட் 2017ல் வெறும் 11 பில்லியன் டாலர் அளவில் இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 20 பில்லியன் டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இத்துறையில் ஏற்கனவே நைகா மிகப்பெரிய அளவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஐபிஓ வெற்றி மூலம் சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

ஜென்-Z வாடிக்கையாளர்கள்
தற்போது ஆன்லைன் விற்பனை தளங்களும், காஸ்மெட்டிக்ஸ் மற்றும் தனிப்பட்ட பியூட்டி ஈகாமர்ஸ் தளங்களும் அதிகமாக இருக்கும் காரணத்தால் மில்லினியல் மற்றும் ஜென்-Z வாடிக்கையாளர்கள் அதிகளவில் அழகு சாதான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

பியூட்டி பொருட்கள்
மேலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தற்போது காஸ்மெட்டிக்ஸ் மற்றும் பியூட்டி பொருட்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகள் முறை மற்றும் செய்முறை வீடியோக்களும் தற்போது அதிகமாக யூடியூப் உள்ளிட்ட பல தளத்தில் உள்ளது.

வெறும் 100 மில்லியன் டாலர்
இந்தியாவில் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான காலணிகள், உள்ளாடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சந்தையில் டாடா குழுமத்தின் டிரென்ட் பிரிவு வெறும் 100 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை மட்டுமே பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இப்பிரிவு வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.