உலகம் முழுவதும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்..? டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா என்ற பல முக்கியமான கேள்விகளுக்குப் பதிலைத் தேடிக்கொண்டு இருக்கும் வேளையில் ஒரு முக்கியமான ஆய்வறிக்கை தற்போது அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் மத்தியில் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 4 வருடத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். இதில் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரிய அளவில் பாதித்தது ஹெச்1பி விசா மற்றும் எல்1 விசாவில் விதிக்கப்பட்ட தொடர் கட்டுப்பாடுகள் தான்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி think-tank அமைப்பு ஒன்று, டிரம்ப் விதித்த விசா தடை மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது என ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜூன் 22
இந்தியாவைப் போலவே கொரோனாவால் அமெரிக்காவில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்பின் எதிரொலியாகப் பல கோடி அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழந்த நிலையில், வெளிநாட்டவர்களும் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைக் குறைக்கத் திட்டமிட்டார். இதன் படி ஜூன் 22ஆம் தேதி ஹெச்1பி மற்றும் எல்1 விசா வழங்குவதை டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை விதித்தார்.

பார்சூன் 500
டிரம்பின் இந்தத் தடையால் அமெரிக்காவில் இருக்கும் பார்சூன் 500 நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் சரிந்துள்ளதாக அமெரிக்காவில் ப்ரூகிங்ஸ் இன்ஸ்டியூட் நிறுவனம் செய்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஊழியர்கள் எண்ணிக்கை
இதுமட்டும் அல்லாமல் ஜூன் 22ஆம் தேதி ஹெச்1பி மற்றும் எல்1 விசா தடையின் மூலம் அமெரிக்காவிற்கு வரும் 2 லட்சம் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வருகையைத் தடை செய்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு சந்தை மட்டும் அல்லாமல் 2 லட்சம் குடும்பங்களைச் சார்ந்த வர்த்தகமும் அமெரிக்கா இழந்துள்ளது.

ஹெச்1பி மற்றும் எல்1 விசா
அமெரிக்காவில் உள்ள திறன் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து திறன் வாய்ந்த ஊழியர்கள் அமெரிக்காவில் வந்து பணியாற்றும் உரிமம் பெறும் விசா தான் இந்த ஹெச்1பி மற்றும் எல்1 விசா.
இந்திய ஐடி மற்றும் பிற துறை ஊழியர்களும், நிறுவனங்களும் அதிகளவில் பயன்படுத்தும் இந்த விசாக்களில் ஜூன் 22 தடை மட்டும் அல்லாமல் கடந்த 4 வருட ஆட்சியில் பல்வேறு தடை மற்றும் கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்துள்ளார்.

இந்திய நிறுவனங்கள்
டிரம்பின் இந்தத் தொடர்ந்து தடையால் அமெரிக்கா செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்தது, மட்டும் அல்லாமல் இந்த ஆட்கள் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் கடந்த 4 வருடத்தில் அமெரிக்க ஊழியர்களைப் பணியில் அமர்த்த அதிகளவிலான நிதியை முதலீடு செய்ய வேண்டிய நிலை உருவானது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் லாப அளவீட்டிலும் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.