டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குவதாக முதலில் அறிவித்த தொழிலதிபர் எலான் மஸ்க், டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டி திடீரென டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருந்து பின்வாங்கினர்.
இதனை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் மீதும், எலான் மஸ்க் மீதும் டுவிட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கிளாஸ் ஆக்சன் என்ற பிரிவில் தாக்கல் செய்யப்பட்டது.
கிளாஸ் ஆக்சன் என்பதற்கு ஒரு குழுவினர் சார்பாக ஒருவர் தாக்கல் செய்யும் மனு என்பது பொருள்.
வாங்கலாமா வேண்டாமா.. டெக் மகேந்திரா குறித்து குழப்பும் நிபுணர்கள்..என்ன தான் செய்வது?

எலான் மஸ்க்
இந்த வழக்கில் '95 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள எலான் மஸ்க் டுவிட்டர் குறித்து வெளியிட்டுள்ள பல கருத்துக்கள் தவறானவை என்றும், அதில் போலி எண்ணிக்கை எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பதால் அந்த நிறுவனத்தை வாங்கும் முடிவிலிருந்து பின்வாங்கியதாக செய்த பதிவும் ஒன்று என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

போலி கணக்குகள்
டுவிட்டரின் போலி கணக்குகள் பற்றி தெரிந்தே தான் டுவிட்டர் நிறுவனத்தை அவர் வாங்க பேரம் பேசியதாகவும் அதன் பின்னர் திடீரென டுவிட்டர் நிறுவனத்தின் வாங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து செல்ல முடியாது என்று கூறியதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரர்களை அவர் இழிவு படுத்தி உள்ளார் என்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு
சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் தொகையை குறைப்பதற்காக போலி கணக்கு என்ற ஆயுதத்தை எலான் மஸ்க் கையில் எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விலை நிர்ணயம்
ஏற்கனவே சமீபத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய எலான் மஸ்க், 'டுவிட்டர் நிறுவனத்தை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலையில் வாங்குவது குறித்த நடைமுறை என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல என்றும் கூறியுள்ளார்.

கருத்து
இந்த வழக்கு குறித்து டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரிகளோ அல்லது எலான் மஸ்க் நிறுவனத்தின் வழக்கறிஞர்களோ இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.