உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான யூனிலீவர் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்தே அதிகப்படியான வர்த்தகத் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் பங்கு முதலீட்டாளர்களும் பல கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் யூனிலீவர் செவ்வாய்க்கிழமை நிர்வாகப் பிரிவில் இருக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்கான முடிவையும் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

யூனிலீவர் நிறுவனம்
யூனிலீவர் நிறுவனம் சில வர்த்தகக் கைப்பற்றல் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளது, சில முதலீட்டாளரின் நெருக்கடி ஆகிய பிரச்சனைகளைத் தீர்க்க யூனிலீவர் நிறுவனம் மேனேஜ்மென்ட் பிரிவில் அதாவது வர்த்தகத்தை நிர்வாகம் செய்யும் பிரிவில் இருந்து சுமார் 1,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

டவ் சோப் முதல் மேக்னம் ஐஸ்கிரீம்
டவ் சோப் முதல் மேக்னம் ஐஸ்கிரீம் வரையில் பல பொருட்களைத் தயாரிக்கும் யூனிலீவர் நிறுவனம் சுமார் 1,49,000 ஊழியர்களை உலகம் முழுவதும் வைத்துள்ளது. மேலும் தனது ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் நிர்வாகத்தையும் 5 பிரிவுகளுக்குக் கீழ் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.

5 பிரிவுகள்
இதன் மூலம் யூனிலீவர் நிறுவனத்தின் வர்த்தகம் இனி வரும் காலத்தில் அழகு மற்றும் நல்வாழ்வு, தனிப்பட்ட பராமரிப்பு, வீட்டுப் பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் ஐஸ்கிரீம் என 5 பிரிவுகளாக இயங்கும்.

மறுசீரமைப்புப் பணிகள்
இந்தப் புதிய நிர்வாக மற்றும் மறுசீரமைப்பு பணிகளைக் கடந்த வருடத்தில் இருந்து செய்து வரும் நிலையில், நிர்வாகப் பிரிவில் தேவையில்லாமல் அல்லது கூடுதலாக இருக்கும் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது யூனிலீவர்.

வாடிக்கையாளர் தேவை
இந்நிறுவனத்தின் வர்த்தகம் மிகப்பெரியதாக இருந்தாலும், வர்த்தகப் பிரிவுகளின் எண்ணிக்கை குறைக்கும் போது வாடிக்கையாளர் தேவையைச் சிறப்பாகப் புரிந்துக்கொள்வது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தையும் சிறப்பான முறையில் விரிவாக்கம் செய்ய முடியும் என யூனிலீவர் நம்புகிறது.

கைப்பற்றல் திட்டம் தோல்வி
யூனிலீவர் நிறுவன பங்குகளின் மதிப்பு கடந்த வருடம் 13 சதவீதம் சரிந்துள்ளது, கடந்த வாரம் இந்நிறுவனம் GlaxoSmithKline நிறுவனத்தின் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் வர்த்தகத்தை 67 பில்லியன் டாலருக்கு வாங்கும் முக்கியமான திட்டத்தைக் கைவிட உள்ளதாக அறிவித்துள்ளது.

1500 பேர் பணிநீக்கம்
GlaxoSmithKline வர்த்தகக் கைப்பற்றல் திட்டம் கைவிட்டது முதலீட்டாளர்களுக்கு எந்த அளவிற்கு அதிர்ச்சி அளித்ததோ, அதை விடப் பெரிய அதிர்ச்சி தற்போது ஊழியர்களுக்கு 1500 பேர் பணிநீக்கம் செய்தி மூலம் கிடைத்துள்ளது.