கொரோனா தொற்றுக்குப் பின்பு தற்போது உலக நாடுகளை அதிகம் பாதிக்கும் ஒன்றாகப் பணவீக்கம் விளங்கும் நிலையில், இதில் எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்று உலக நாடுகள் முயற்சி செய்தாலும் ரஷ்யா உக்ரைன் போர், சீனா கொரோனா தொற்று, கச்சா எண்ணெய் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, சப்ளை செயின் பாதிப்புகள் என அடுத்தடுத்துப் பணவீக்கத்தைப் பாதிக்கும் பல பிரச்சனைகள் வந்தது.
இதனால் உலக நாடுகளுக்கு வேறு வழியே இல்லாமல் நாணய கொள்கை தளர்வுகளைக் குறைக்கவும், பணப்புழக்கத்தைக் குறைக்கவும் வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்காக ஒரு முறை வட்டியை உயர்த்திய நிலையில் புதன்கிழமை ஆர்பிஐ போலவே மீண்டும் வட்டியை உயர்த்தியுள்ளது.
டாடா குழுமத்தின் இவ்விரு பங்குகளை வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்கள் பலே!

பெடரல் ரிசர்வ்
2000த்திற்குப் பின்பு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டியை அதிகளவில் உயர்த்தியுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் பெடரல் ரிசர்வ் பல வருட உச்சத்தில் இருக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தனது பென்ச்மார்க் வட்டியை 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது.

பணவீக்கம்
அமெரிக்காவின் பணவீக்கம் மிக அதிகமாக உள்ளது, அதனால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக நாங்கள் புரிந்துகொண்டோம். இதன் வாயிலாகப் பணவீக்கத்தைக் குறைத்து மீண்டும் வலிமையான வளர்ச்சி திரும்ப வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளோம் எனப் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் கூறினார்.

50 அடிப்படை புள்ளிகள் உயர்வு
மேலும் அடுத்த இரண்டு கூட்டங்களுக்குக் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.50 சதவீதம் வட்டியை உயர்த்தும் திட்டம் கையில் உள்ளது எனவும் ஜெரோம் பவல் கூறினார். ஆனால் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் 75 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்ற விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

ரிசர்வ் வங்கி
இதேபோல் இந்திய ரிசர்வ் வங்கி அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்தைத் தடுக்கவும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கவும், பணவீக்கத்தைக் குறைக்கவும் அமெரிக்காவுக்கு முன்பாகவே 0.40 சதவீத வட்டியை உயர்த்தி ரெப்போ விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தியது.

2020 வட்டி குறைப்பு
கொரோனா தொற்றுக் காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ மார்ச் 27, 2020ல் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்தது, இதைத் தொடர்ந்து மே 22, 2020ல் கூடுதலாக 40 அடிப்படை புள்ளிகள் குறைத்து வெறும் 4 சதவீதமாக ரெப்போ விகிதத்தை நிர்ணயம் செய்தது.

மீண்டும் பழைய வட்டி
இந்நிலையில் 2 வருடத்திற்குப் பின்பு ஆர்பிஐ 0.40 சதவீத வட்டியை உயர்த்திய நிலையில் அடுத்தடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் 0.75 சதவீதம் அளவிலான வட்டியை உயர்த்திப் பழைய நிலைக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வர திட்டமிடுவதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வைப்பு நிதி
இந்த வட்டி உயர்வு மூலம் வங்கி வைப்பு நிதி வைத்துள்ளவர்களுக்கு அதிகப்படியான வட்டி வருமானம் கிடைத்தாலும், கடன் வாங்கியுள்ள கோடிக்கணக்கான மக்களுக்குப் பெரும் சுமை. இந்தச் சுமையில் நாட்டின் பணவீக்கம், விலைவாசி குறையும் என்பதால் நன்மையே..