நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியின் முன்கூட்டிய மதிப்பீடு பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2021 நிதியாண்டில் -7.3 சதவீத சரிவை, 2022ஆம் நிதியாண்டில் 9.2% என்ற வளர்ச்சி கணிப்பு பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது.
பங்குச்சந்தைக்கு இதுபோன்ற ஒரு செய்தி கட்டாயம் தேவை, கடந்த ஆண்டுப் பெரிய -7.3 சதவீத சரிவை சந்தித்தாலும் பங்குச்சந்தை முடங்காமல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தான் இருந்தது.

பொருளாதாரம்
பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தபோது, மந்தமான தேவை, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உடைந்த விநியோகச் சங்கிலி காரணமாக, மார்க் மொபியஸ் போன்ற பிரபல முதலீட்டாளர்கள் இந்தியாவை 50 ஆண்டுக் கால அவகாசத்துடன் ஆதரித்தனர். ஆனால் இது எந்த அளவிற்கு நியமானது என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.

உலக வங்கி
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2021-இல் 5.5 சதவீதமாக இருந்த சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீடு 2022 இல் 4.1 சதவீதமாகக் குறையும், இதைத் தொடர்ந்து 2023 இல் 3.2 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

குறைந்த ஜிடிபி வளர்ச்சி
குறைந்த ஜிடிபி வளர்ச்சியானது இந்தியாவின் அரசியல் பொருளாதார வீழ்ச்சியின் முக்கியப் பின்விளைவாக இருக்கும். இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 2018-2019 இல் 6.3% ஆகவும், 2017-18 இல் 4.7% ஆகவும் இருந்த நிலையில் 2021 டிசம்பரில் 7.91% ஆக உயர்ந்துள்ளது.

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை
2021 டிசம்பரில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 9.3% அதிகமாக இருந்தது, தேர்தல்களில் வெற்றி பெற லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வாக்குறுதி அளித்து வருகிறது.

நுகர்வு
இந்தியப் பொருளாதாரத்தைத் தற்போதைய அளவில் இருந்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு, இந்தியாவிலிருந்து சரக்கு ஏற்றுமதியில் அதிவேக வளர்ச்சி தேவை அல்லது கிராமப்புற முதல் நகரபுறம் வரையில் இந்தியாவில் அதிகப்படியான நுகர்வில் வளர்ச்சி அதிகமாக வேண்டும்.

உள்நாட்டுத் தேவை
இது இந்தியத் தயாரிப்புகளுக்கான உள்நாட்டுத் தேவையைத் தூண்டி, பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் அதிகப்படியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

சாலை மற்றும் நெடுஞ்சாலை
வேலை வாய்ப்புகளை உருவாக்கச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பாரம்பரிய திட்டம் இந்தியாவிற்கு உதவவில்லை, உள்கட்டமைப்புக் கட்டிடம் வேலைகளை உருவாக்கும் திறனை இழந்துவிட்டதால் அல்ல, இதற்கு மாறாக அதன் கிளை பொருளாதார நடவடிக்கைகள் வேகமாக வளர்ச்சி அடையவில்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை.

வாகன உற்பத்தி
உதாரணமாக இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் ஏப்ரல் 2014 முதல் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆனால் வாகன உற்பத்தி 1 சதவீதம் கூட அதிகரிக்கவில்லை. இப்படியிருக்கும் போது சாலை கட்டுமானம் 100 சதவீதம் அதிகரித்தாலும் பயனில்லை.

SME நிறுவனங்கள்
மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் SME நிறுவனங்களை மேன்மேலும் வளர்ச்சி அடையப் பெரிய அளவில் உதவ வேண்டும். காரணம் இந்தியாவில் 40 சதவீத வேலைவாய்ப்புகள் இந்த SME பிரிவு நிறுவனங்களில் தான் இருக்கிறது. மத்திய அரசு இத்துறை வளர்ச்சிக்கு அதிகப்படியான கடன்களைக் கொடுத்தாலும் அது இத்துறை நிறுவனங்களுக்குப் போதுமானதாக இல்லை.

பணமதிப்பிழப்பு டூ கோவிட் 19
2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, அந்தத் துறையில் எஞ்சியிருந்த அனைத்தையும் கோவிட்-19 தொற்றுக் கொண்டு சென்றுள்ளது. இதனாலேயே இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

ஏற்றுமதியை மட்டுமே நம்பவேண்டாம்
கோவிட் தொற்றுக்குப் பின்பு உலக நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை ஏற்றுமதியை நம்பி புதிதாக வழிநடத்த வாய்ப்பில்லை, இதுதான் உண்மையும் கூட. இந்தியா இந்த யதார்த்தத்தை ஏற்று, வரும் ஆண்டுகளில் உயர் வளர்ச்சிக்கு ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்காமல் அனைத்து துறைக்கும் அதிகப்படியான முக்கியத்துவத்தைக் கொடுத்துக் கவனம் செலுத்த வேண்டும்.