உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் அண்டை நாடுகளுக்கு அதிகளவிலான கவலையும், பயத்தையும் அளித்துள்ளது. இதன் வாயிலாகப் பின்லாந்து நாடு வல்லரசு நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோ-வில் உறுப்பினராகச் சேர விண்ணப்பித்தது.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு அடிப்படை காரணமே, உக்ரைன் நேட்டோவில் சேர விரும்பியது தான். இந்த நிலையில் பின்லாந்து-ன் அறிவிப்பு ரஷ்யா-வை சூடாக்கியுள்ளது.
இதற்கிடையில் ரஷ்யா பின்லாந்து இயற்கை எரிவாயுவில் கைவைத்துள்ளது.
ஏர்டெல் முக்கிய அறிவிப்பு: ப்ரீபெய்டு சேவை கட்டணம் விரைவில் உயர்வு.. ஜியோ திட்டம் என்ன..?

பின்லாந்து
பாதுகாப்பு அச்சத்தின் காரணமாகப் பின்லாந்து அரசு நேட்டோ அமைப்பில் சேர விரும்பி விண்ணப்பம் கொடுத்த இரண்டு நாட்களில் ரஷ்யா பின்லாந்து-க்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியை மொத்தமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் சனிக்கிழமை முதவ் ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்த உள்ளது.

Gazprom அறிவிப்பு
ரஷ்ய அரசின் எரிசக்தி நிறுவனமான Gazprom, பின்லாந்து நாட்டின் Gasum நிறுவனத்திற்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதி மற்றும் விநியோகத்தை நிறுத்துவதாக வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ரஷ்யா விநியோகத்தை நிறுத்தியும் உள்ளது.

ரூபிள் நாணய வர்த்தகம்
மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட பின்னர் ரஷ்ய அதிபரான புடின் டாலரை நம்பி வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் அனைத்து நாடுகளையும் ரூபிள் நாணயத்தில் வர்த்தகம் செய்ய அறிவுறுத்தியது. ஆனால் பின்லாந்து இதைப் பிற ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து மறுத்துவிட்டது.

எரிவாயு ஏற்றுமதி நிறுத்தம்
பின்லாந்து ரூபிள் நாணய பரிமாற்றத்தை ஏற்க மறுத்த காரணத்திற்காகத் தான் எரிவாயு ஏற்றுமதி மற்றும் விநியோகத்தை நிறுத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. ஏற்கனவே பல்கேரியா மற்றும் போலந்திற்கு எரிவாயு வழங்குவதை ரஷ்யா நிறுத்திய பின்னர்ப் பின்லாந்தும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளது.

பின்லாந்து திட்டம்
பின்லாந்து தற்போது தனது இயற்கை எரிவாயு தேவையை எஸ்தோனியா-வின் பால்டிக் கனெக்டர் பைப்லைன் மூலம் பூர்த்திச் செய்யும் என்று பின்லாந்து நாட்டின் Gasum நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதேபோல் பின்லாந்து நாட்டின் Stora Enso நிறுவனமும் ரஷ்யா எரிவாயுவுக்குப் பதிலாக LNG-ஐ பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பு
நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர பின்லாந்து மற்றும் ஸ்வீடன் முடிவுக்கு ரஷ்யா ஆரம்பத்தில் கடுமையாகப் பதிலளித்தது, கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என மிரட்டியது. இதன் பின்பு தான் எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது.