இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2021 உடன் முடிந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு வருடமாகவே அதிகளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற்று வரும் இதேவேளையில், பல்வேறு காரணங்களால் இத்துறை நிறுவனங்களின் செலவுகளும் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களின் 2021ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டு முடிவுகளை முதலீட்டாளர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரையில் அனைத்து தரப்பினரும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் Q3 முடிவுகள்.. கவனிக்க வேண்டியவை என்ன!

விப்ரோ நிறுவனம்
இந்திய ஐடி சேவை சந்தையில் 4வது பெரிய நிறுவனமாகத் திகழும் விப்ரோ புதன்கிழமை மாலையில் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இக்காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் லாப அளவுகள் 8.67 சதவீதம் சரிந்து 2,419.8 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் விப்ரோ 2,649.7 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய்
இதேபோல் விப்ரோ நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் வருவாய் அளவு கடந்த வருடத்தைக் காட்டிலும் 21.29 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 12,596 கோடி ரூபாய் வருவாய் அளவீட்டில் இருந்து 15,278 கோடி ரூபாய் வருவாய் அளவீட்டை பதிவு செய்துள்ளது. ஆனால் சந்தை வல்லுனர்கள் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் இக்காலாண்டில் 30 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணித்திருந்தனர்.

மொத்த வருவாய்
மேலும் விப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 20,313 கோடி ரூபாயாக உள்ளது. இது செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 3.3 சதவீதம் அதிகம், இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டை விடவும் 29.6 சதவீதம் அதிகம். இவ்விரண்டும் சந்தை கணிப்பு அளவுகளை எட்டியுள்ளது.

தியரி டெலாபோர்ட்
விப்ரோ நிறுவனம் தொடர்ந்து 5 காலாண்டுகளில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் கடந்த 12 மாதங்களில் $100 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கொடுக்கும் திட்டங்கள் பிரிவில் 7 புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளோம் என விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் தியரி டெலாபோர்ட் கூறியுள்ளார்.

ஈவுத்தொகை
மேலும் விப்ரோ நிறுவனம் ஒரு பங்குக்கு 1 ரூபாய் என்ற இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இதற்கான பதிவு தேதி ஜனவரி 24, 2022 என்று நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்டு உள்ள இடைக்கால ஈவுத்தொகை பிப்ரவரி 5, 2022 அன்று அல்லது அதற்கு முன் செலுத்தப்படும்.

சம்பள உயர்வு
இந்தியாவின் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டுக்கான சம்பள உயர்வு அளிக்க ஊழியர்கள் வருடாந்திர செயல்திறனை ஆய்வு செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் லாப அளவீடுகள் சரிந்துள்ள காரணத்தால் ஊழியர்களின் சம்பள உயர்வு பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் உருவாகியுள்ளது.