கொரோனாவின் வருகைக்கு பின்னர் பல துறைகளில் சம்பள விகிதம் என்பது மோசமான சரிவினைக் கண்டது. சம்பளமில்லா விடுமுறை, பணிநீக்கம் சம்பள குறைப்பு என பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால் அந்த சமயத்தில் வழக்கத்துக்கு மாறாக சம்பள உயர்வு விகிதம், சம்பளம் அதிகரிப்பது, ஊதிய உயர்வு ஒரே வருடத்தில் இருமுறை அதிகரிப்பு போன்ற ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஐடி துறையினர் மட்டும் சந்தோஷத்தில் இருந்து வந்தனர்.
ஆனால் தற்போது ஐடி துறையினருக்கு சற்று கவலை அளிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்காவின் பல நகரங்களிலும் ஐடி துறையினருக்கு சம்பள விகிதம் குறைந்துள்ளதாக வெளியாகியுள்ளது. ஐடி துறை மட்டும் அல்ல, ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் சம்பள விகிதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
சொமேட்டோ: 2 நாளில் 10 ரூபாய் சரிவு.. தமிழும், தமிழர்கள் செய்த சம்பவமும்..!

சம்பள சரிவு
ஏன் என்ன காரணம்? எதற்காக சம்பள விகிதம் குறைந்துள்ளது? இதனால் இந்திய ஊழியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? வாருங்கள் பார்க்கலாம். கொரோனாவின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் நகரங்களில் சம்பள விகிதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

டெக் ஊழியர்களின் சம்பளம் குறைவு
கொரோனாவின் காரணமாக பல நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றலாம், எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற சலுகையினை வழங்கியுள்ளன. தற்போது இதே நிலையில் பல ஊழியர்களும் பணியாற்றவே விரும்புகின்றனர். இதனால் சம்பள விகிதமும் குறைந்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ தற்போதும் கூட அதிகம் சம்பளம் கொடுக்கும் ஒரு நகரமாக இருந்தாலும், டெக் ஊழியர்களின் சராசரி வருடாந்திர சம்பளம் 0.3% குறைந்து, 1,65,000 டாலர்களாக குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த துறையில் சம்பளம்
அமெரிக்காவில் ஒட்டுமொத்த துறையினரின் சம்பள விகிதமும் 1.1% குறைந்துள்ளதாகவும், தற்போது சராசரியாக சம்பள விகிதமானது 1,52,000 டாலர்களாக உள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி முக்கிய நகரங்களான நியூயார்க், அட்லாண்டா, டல்லாஸ் உள்ளிட்ட நகரங்களிலும் சம்பள விகிதம் குறைந்துள்ளது.

தொலைதூரத்தில் இருந்து வேலை
தொழில்நுட்ப தொழிலாளர்கள் இன்னும் அதிகமாக தொலைதூரத்திலிருந்து பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அதாவது 10ல் 8 பேர், அதே நிலையில் இருந்தே பணிபுரிய விரும்புகின்றனர். பலர் பெரிய நகரங்களுக்கு வெளியே இருந்த பணிபுரிந்து வருகின்றனர். அவர்களும் அப்படியே பணிபுரிய விரும்புகின்றனர் என்று ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

என்ன காரணம்?
இதற்கு முக்கிய காரணம் சான்பிரான்சிஸ்கோவில் அதிக செலவு என்பதே என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. சான்பிரான்சிஸ்கோ நகரில் அதிக நிகர சம்பளத்தை வழங்கினாலும், ஊழியர்கள் அதிக வாடகை, மளிகை பொருட்கள், உள்ளூர் வரிகள் என பலவற்றையும் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் ஊழியர்கள் பலரும் தொலை தூரத்தில் இருந்தே பணியாற்ற விரும்புகின்றனர்.

இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பா?
அமெரிக்கா டெக் நிறுவனங்களில் சம்பள விகிதம் குறைந்தாலும், அமெரிக்காவில் பணிபுரியும் டெக் ஊழியர்களில் அதிகம் இந்திய ஊழியர்களே. ஆக அவர்களுக்கும் பாதிப்பு உண்டு எனலாம். அமெரிக்காவினை போன்றே இந்தியாவில் விப்ரோ, ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும், ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கூறியுள்ளன. வரும் காலத்தில் சில நிறுவனங்கள் பிளெக்ஸி முறையை அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளன.

வொர்க் ப்ரம் ஹோம் வேண்டாம்
அதோடு சமீபத்திய ஆய்வில் வீட்டில் பணிபுரிந்தால், அது ஊழியர்களுக்கு கைகொடுக்காது, அது முன்னேற்றம் தராது. இது ஐடி ஊழியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்று கூறப்பட்டது. இது குறித்து https://tamil.goodreturns.in/news/top-money-manager-warn-about-young-people-continuing-to-work-from-home/articlecontent-pf131261-025163.html என்ற கட்டுரையில் விரிவாக பார்த்தோம். ஆக ஐடி ஊழியர்களாக இருந்தாலும், எந்த துறை சார்ந்த ஊழியராக இருந்தாலும், வீட்டில் இருந்து பணிபுரிவது என்பது தவிர்க்க வேண்டிய விஷயமே. இன்று அமெரிக்காவில் நிலவி வரும் இதே நிலையில், இந்தியாவிலும் விரைவில் வரலாம். ஆக முன் கூட்டியே நம்முடைய திறனை வளர்த்துக் கொண்டு, அதற்கேற்ப செயல்படுவது நல்லது.