கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் அமைந்துள்ளது.
இந்த ஆலை தைவான் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE ஸ்மார்ட்போன், IOT மற்றும் பயோடெக் சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தைவானின் விஸ்ட்ரான்
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஆலையில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். விஸ்ட்ரான் நிறுவனத்திற்காக மாநில அரசிடம் இருந்து 43 ஏக்கர் நிலத்தை பெற்றுள்ளனர். இதில் சுமார் 2,900 கோடி ரூபாய் முதலீடும் செய்யப்பட்டுள்ளது. இப்படி பல சலுகைகளை பெற்று கர்நாடகாவில் இருந்து உற்பத்தி செய்து வருகின்றது.

அலுவகத்தினை துவம்சம் செய்த ஊழியர்கள்
இப்படியொரு நிலையில் தான் நேற்று இரவு பணிக்கு வந்த ஊழியர்கள் பணியை முடித்தவுடன், தொழிற்சாலையை கண்டபடி அடித்து நொறுக்கியுள்ளனர். நிறுவனத்தில் இருந்த உபகரணங்கள், உற்பத்தி இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கட்டைகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ஆலையில் இருந்த கண்ணாடி கதவுகள் உள்ளிட்டவை உடைந்துள்ளதாக தெரிகிறது.

பதற்றமான சூழல்
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து காலை 5.45 மணியளவில் நிறுவனத்தை அடித்து நொறுக்கியதில் அந்த இடமே பதற்றமான ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதுபற்றி அறிந்த கோலார் மாவட்டத்தில் இருந்து போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதுமட்டும் அல்ல இந்த சம்பவம் தொடர்பாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சம்பள பிரச்சனை
அதில் அந்நிறுவன ஊழியர்கள் கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள், கார்கள், அதிகாரிகளின் அறைகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதன் பின்னணி காரணம் குறித்து விசாரிக்கையில், ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் குறித்த சம்பளத்தை வழங்காமல் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக தெரிகிறது.

குறைந்த சம்பளம் தான்
அதுமட்டும் அல்ல பொறியியல் படித்த பட்டதாரிக்கு மாதம் 21,000 ரூபாய் சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால் அதிலும் பிடித்தம் செய்து வெறும் 16,000 ரூபாய் மட்டுமே வழங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அந்த குறைந்த சம்பளத்தினையும் கடந்த சில மாதங்களில் 12,000 ரூபாயாக குறைத்துள்ளதாக தெரிகிறது.

வெறும் ரூ.5000 தான் கணக்கில்
அதோடு பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கு மாதச் சம்பளமாக 11,000 ரூபாய் சம்பளம் என்ற கூறி சேர்த்து, வெறும் 5,000 ரூபாய் மட்டுமே வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதன் காரணமாகத் தான் ஊழியர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில் சிலர் தங்களுடைய வங்கிக் கணக்கில் வெறும் 500 ரூபாய் மட்டுமே சம்பளமாக போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஓடி பிரச்சனை வேறு
ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்துள்ளனர். ஆனால் அதிக நேரம் வேலை செய்ததற்காக எந்த ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆக அதிலும் நிர்வாகத்துடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

மோசமான உணவு வசதி
அதுமட்டும் அல்ல ஊழியர்களுக்கு அங்கு வழங்கப்பட்ட உணவும் மிக மோசம் என ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு வேலை செய்யும் பெரும்பாலான ஊழியர்கள் முதலில் ஒப்பந்த அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த ஊழியர்களில் பலர் ஹெச்ஆர் அலுவலர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

ஏஜென்சி மூலம் பணியமர்த்தல்
அதுமட்டும் அல்ல இங்கு பணியில் அமர்த்தப்படும் ஊழியர்கள் ஏஜென்சிகள் மூலம் பணி அமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று தெரியாத நிலையில், ஊழியர்கள் இப்படி போராட்டத்தினை கையில் எடுத்துள்ளனர். இப்போராட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை கைது செய்து செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.