உண்மையில் நடப்பு ஆண்டில் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கன் அந்தளவுக்கு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அது பல ஆயிரம் மக்களையும், பொருளாதாரத்தினையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்று விட்டது.
இப்படி ஒரு மோசமான நிலையில் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சியினைக் கண்டது.
இதே இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த அளவு சரிவு இல்லை என்றாலும், ஜிடிபி விகிதம் 7.5 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. நிபுணர்கள் இதனை 10% மேலாக சரியும் என்று கணித்திருந்த நிலையில், எதிர்பார்த்த அளவு சரிவு இல்லை என்பது சற்றே ஆறுதல் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் குறித்த சாதகமான கணிப்புகள்
இதற்கிடையில் தற்போது தான் இந்திய பொருளாதாரம் குறித்தான சாதகமான கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதிலும் தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய பொருளாதாரம் ரெசசனிற்கு தள்ளப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும், நிபுணர்கள் கணிப்பினை விட, சற்று குறைவாக வீழ்ச்சி கண்டுள்ளது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

Q4ல் சாதகமான வளர்ச்சி காணும்
இடி-யில் வெளியான செய்தியொன்றில், இந்தியா பொருளாதாரத்தின் மோசமான காலம் முடிந்து விட்டது. தற்போது நல்ல காலம் தொடங்கி விட்டது. இது அடுத்த வரும் காலாண்டுகளில் சாதகமாக வளர்ச்சியினை காணலாம். குறிப்பாக நான்காவது காலாண்டில் 2.5 சதவீதம் வளர்ச்சி காணலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மூன்றாவது காலாண்டு வளர்ச்சி
அதெல்லாம் சரி நான்காவது காலாண்டில் 2.5 சதவீதம் வளர்ச்சி காணலாம். மூன்றாவது காலாண்டில் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு? மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி 1.5% சரிவினைக் காணலாம். ஒரு வேளை சாதகமான காரணிகள் அமைந்தால் வளர்ச்சி சாதகமாக இருக்கலாம். எனினும் நான்காவது காலாண்டில் சாதகமான நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் கணித்துள்ளனர்.

அடுத்த ஆண்டில் வளர்ச்சி?
ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்தமாக நடப்பு ஆண்டில் பார்க்கும் போது பொருளாதார வளர்ச்சி மைனஸில் இருக்கலாம். ஆனால் அடுத்த நிதியாண்டில் 8 - 8.5 சதவீதம் இருக்கலாம். ஆக மோசமான காலத்தின் முடிவில் இந்தியா உள்ளது. தற்போது கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாம் கண்ட வளர்ச்சி திருவிழா பருவத்தால் வந்ததா? இது நவம்பர் மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் தொடருமா என்பது தான்.

வலுவான வளர்ச்சியில் இந்தியா
மேலும் இந்தியாவின் வளர்ச்சி மெதுவாகத் தான் உள்ளது. ஆனால் சரியான பாதையில் போயிக் கொண்டுள்ளது. வளர்ச்சி சற்று மெதுவானதாக இருந்தாலும், வலுவான வளர்ச்சியாக காணப்படுகிறது. ஆக இந்த நிதியாண்டின் இறுதிக்குள் நாம் ஒரு நேர்மறையான வளர்ச்சியினை காணலாம் என்று டாய்ஷ்டச் வங்கியின் இயக்குனர் மற்றும் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் தாஸ் இடிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.