இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இத்தனை வகைகள் உள்ளனவா?

Posted By: ABU BAKKER FAKKIRMOHAMED
Subscribe to GoodReturns Tamil

பணத்தை வெறுமனே வீட்டிலோ அல்லது வங்கியிலோ சேமித்து வைப்பதைக் காட்டிலும் அதனைப் பாதுகாப்பாகவும், பல்கிப் பெருகும் வகையிலும் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வதைப் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். எதில் முதலீடு செய்யலாம் என யோசிக்கையில் நம்முடைய விருப்பப் பட்டியலில் மியூச்சுவல் ஃபண்ட் என்கின்ற பரஸ்பரநல நிதி கட்டாயம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. பரஸ்பரநிதி நம்முடைய முதலீட்டுக்கான விருப்பத் தேர்வாக அமையுமானால், பல்வேறு வகைப்பட்ட பரஸ்பர நிதித் திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

இந்தியாவில் பரஸ்பர நிதி சார்ந்த திட்டங்களும் அதன் மீதான முதலீடுகளும் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கண்டு வருகின்ற போதிலும் பலர் அதில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் பணத்தை இழந்து விடுவோம், ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம் என்கின்ற எச்சரிக்கை உணர்வுதான் இதற்குக் காரணம். பரஸ்பர நிதித் திட்டங்கள் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் ஏற்பட்டால் இத்தகைய பயம் நீங்கிவிடும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மிகவும் எளிமையானவை. புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் நிறைய இலாபம் ஈட்டமுடியும். முதலீடு செய்கின்ற தொகை, எதிர்விளைவுகளை எதிர்கொள்கின்ற துணிச்சல், முதலீட்டுக்கான கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து நமக்குத் தகுந்த பரஸ்பர நிதித் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சில குறிப்பிடத் தகுந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் குறித்து இனி காண்போம்.

வரையறுக்கப்பட்ட பரஸ்பர நிதித் திட்டம் (Close – Ended)

இத்தகைய நிதியத்தினை, திட்டம் அறிவிக்கப்படும் தொடக்கக் காலப் பகுதியில் மட்டுமே வாங்க முடியும். நிதியத்திற்கான முதிர்வுத் தேதியும் முன்னரே முடிவு செய்யப்பட்டிருக்கும். இத்திட்டத்தின் கீழ் வாங்கிய ஃபண்டுகளைத் திரும்ப விற்க இயலாது. பங்குச் சந்தையில் மட்டுமே அப்போதைய விலைக்கு ஏற்ப அதனை விற்கலாம்.

திறந்தநிலை பரஸ்பர நிதித் திட்டங்கள் (Open Ended).

இத்தகைய திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் பரஸ்பர நிதியங்களை ஆண்டு முழுவதும் எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இத்தகைய ஃபண்டுகளின் மீது நாம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இத்தகைய மியூச்சுவல் ஃபண்டுகளை நாம் விரும்புகின்ற காலம் வரை விற்காமல் வைத்திருக்கலாம். இதன் கரணமாகவே இத்தகைய ஃபண்டுகளுக்கு நாம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். முதலீடுகளை எப்பொழுது வேண்டுமானாலும் பணமாக மாற்றிக் கொள்ள நினைப்பவர்களுக்கு இத்தகைய பரஸ்பரநிதித் திட்டம் பொருத்தமானதாக இருக்கும்.

கடன் பத்திர வகை (Debt)

கடன் உறுதிப் பத்திரங்கள், அரசு நிறுவனப் பங்குகள், பங்குப் பத்திரங்கள் போன்றவை கடன் பத்திர வகையிலான பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்களில் அடங்கும். நிலையான வருமானத்தையும் இலாபத்தையும் தருவதால் இவ்வகையான முதலீடுகள் பாதுகாப்பானவையாகும். இலாபம் உறுதி என்றாலும் அது குறைந்த அளவிலேயே இருக்கும். முதலீட்டின் போது வரிப் பிடித்தம் செய்யப்படுவதில்லை அதனால் முதலீட்டிற்கான வருமானத்தின் போது வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும்.

சமஉரிமைப் பங்கு வகைகள் (Equity)

கடன் பத்திர வகையிலான பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்தால், குறைந்த அளவிலான வருமானமாவது உறுதி செய்யப்படும். ஆனால் சமஉரிமைப் பங்கு வகையிலான நிதித் திட்டங்களில் சந்தை அபாயங்கள் அதிகம். சந்தை அபாயத்தை எதிர்கொள்கின்ற துணிச்சலுடன் முதலீடு செய்தால் அதிகமான இலாபம் ஈட்டமுடியும். நிறுவனங்களின் பங்குகளின் மீதான முதலீடாக இருப்பதால் வரிசார்ந்த பொறுப்புகள் குறைவு.

கலப்பு நிலை பரஸ்பர நிதித் திட்டங்கள் (Hybrid)

கடன் உறுதி சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களின் தன்மைகளையும், சமஉரிமைப் பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களின் தன்மைகளையும் ஒருங்கே பெற்றவை இவ்வகையிலான நிதித் திட்டங்கள். கடன் நிதித் திட்டங்களைக் காட்டிலும் அபாயங்கள் நிறைந்தது. ஆனால், சமஉரிமைப் பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களைக் காட்டிலும் சிறந்தது. இவ்வகை நிதித் திட்டங்களின் மீதான இலாபம் மேற்கண்ட இருவகைத் திட்டங்களின் மீதான இலாபங்களுக்கு இடைப்பட்டு அமையும். உதாரணமாக, கலப்பு நிலை பரஸ்பர நிதித் திட்டங்களில் செய்யும் முதலீடுகளுக்கு 65% முதல் 80% வரையிலான இலாபம் சமநிலைப் பங்குகளின் வழியாகவும் மீதி இலாபம் கடன் நிதித் திட்டங்களின் வழியாகவும் கிடைக்கும்.

நிலையான வருமானத் திட்டம் (Fixed – Incom)

இத்தகைய திட்டத்தின் கீழ் அமையும் பரஸ்பர நிதியங்கள் குறைவான சந்தை அபாயங்களைக் கொண்டது. குறிப்பிட்ட கால இடைவெளியில் நிலையான இலாபத்தை ஈட்டித் தரும். அதனால்தான் இவ்வகையான நிதித் திட்டங்கள் கடன்சார் நிதித் திட்டங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கடன்சார் பரஸ்பர நிதியத்தைப் போலவே அதிகப்படியான இலாபத்தை எதிர்பார்க்க இயலாது. ஆனால் குறைந்த அளவிலான இலாபம் உறுதி செய்யப்படும். நிலையான வருமானத் திட்ட அடிப்படையிலான பரஸ்பர நிதித் திட்டத்தில் நாம் செய்யும் முதலீட்டுக்கான பங்காதாயம், வளர்ச்சி சார்ந்த பரஸ்பர நிதித் திட்டத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.

வளர்ச்சி சார்ந்த வருமானத் திட்டம் (Growth Income)

இவ்வகையிலான பரஸ்பர நிதிய முதலீடு சமஉரிமைப் பங்கு முதலீட்டைப் போலவே இருக்கும். அதிகமான சந்தை அபாயங்களைக் கொண்டது. இவ்வகையான முதலீட்டுக்கான பங்காதாயம் நிலையான வருமானத் திட்ட நிதியத்தைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும்.

சமநிலையிலான நிதியங்கள் (Balanced)

பெயருக்கு ஏற்றார்போல நிலையான வருமானம் மற்றும் வளர்ச்சிசார் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த பரஸ்பர நிதித் திட்டங்களின் கூட்டிணைவாகச் சமநிலை பரஸ்பர நிதியங்கள் விளங்குகின்றன. இதன் மூலம் நம்முடைய பணம் கடன்பத்திரம் மற்றும் சமநிலைப் பங்குகள் ஆகிய இரண்டிலும் முதலீடு செய்யப்படுகிறது. இவ்வகையான நிதியத்தில் இலாபமும் உண்டு, அதேவேளையில் நம்முடைய முதலீட்டுக்குப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. வளர்ச்சி சார் நிதியம் மற்றும் முன்னுரிமை பங்கு சார்ந்த நிதியத்தைக் காட்டிலும் சந்தை அபாயங்கள் குறைவு. அதே சமயத்தில் நிலையான வருமானம் மற்றும் கடனுறுதி சார்ந்த நிதியத்தைக் காட்டிலும் அபாயங்கள் அதிகம்.

வருமானவரி சேமிப்புத் திட்டங்கள்

பங்குச் சந்தையோடு இணைந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இத்தகைய திட்டங்களின் மூலம் வருமான வரி்த் தள்ளுபடி மற்றும் வருமான வரிச் சேமிப்பினையும் பெறமுடியும். ஒரு லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்கு மட்டுமே வருமான வரித் தள்ளுபடி பெறமுடியும். முதலீடு செய்யும் தொகை மூன்றாண்டுகள் வரை முடங்கிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இதில் செய்த முதலீட்டை மாற்றவோ, திரும்பப் பெறவோ அல்லது விற்கவோ முடியாது.

கில்ட் திட்டங்கள் (Gilt Scheme)

இந்திய அரசு நிறுவனங்களுக்காக ரிசர்வ் வங்கியால் வெயிடப்படும் பங்குகளின் மீதான பரஸ்பர நிதித் திட்டங்களைக் கில்ட் திட்டங்கள் என அழைக்கிறோம். இவ்வகையான முதலீடுகளில் சந்தை அபாயங்கள் குறைவு.

அசையாச் சொத்துக்கள் சார்ந்த திட்டங்கள் (Real Estate Schemes)

பெரும்பாலோர் நினைப்பது போல ரியல் எஸ்டேட் சார்ந்த திட்டங்கள் என்பது ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்வது இல்லை. சொத்துக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத் திட்டங்களில் முதலீடு செய்வது, குடியிருப்புகளைக் கட்டிக்கொடுக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்குதல் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும். எந்த நிறுவனம் வெளியிடும் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் அந்நிறுவனங்கள் நம்முடைய பணத்தை எங்கு முதலீடு செய்கிறது என்பதைப் பொறுத்தும் நம் முதலீட்டுக்கான வருமானம் அமையும்.

இடைநிலைத் திட்டங்கள் (Interval Scheme)

இடைநிலைத் திட்டங்கள் என்பது வரையறுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் திறந்தநிலைத் திட்டங்கள் ஆகியவற்றின் கலவையாய் அமைந்தது. இத்தகைய திட்டங்களின் அடிப்படையில் முதலீடு செய்யும் நிதியங்களை நாம் விற்கலாம், திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் பங்குச் சந்தை வணிகத்திற்கும் உட்படுத்தலாம்

துறை சார்ந்த திட்டங்கள் (Sector Scheme)

நிறுவனப் பங்குகளின் மீதான முதலீட்டை அடிப்படையாகக் கொண்டது இத்திட்டம். இத்தகைய திட்டங்கள் சில குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே பொருந்தும். நாம் எத்துறையில் முதலீடு செய்கிறோம் என்பதைப் பொறுத்து நம்முடைய இலாபம் அமையும் என்பதால், இதில் சந்தைசார் அபாயங்கள் அதிகம். முதலீடு தொடர்பான பரந்துபட்ட அறிவு உள்ளவர்களால் மட்டுமே இந்நிதியத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க முடியும்.

குறியீட்டுத் திட்டங்கள் (Index Scheme)

குறியீட்டுத் திட்ட பரஸ்பர நிதியங்கள், இலாபம் தரும் நிறுவனங்களின் பங்குகளை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டிய சுமையை முதலீட்டாளர்களுக்குக் கொடுப்பதில்லை. இத்தகைய திட்டம் சார்ந்த பரஸ்பர நிதியங்கள் சமஉரிமைப்பங்கு நிதியத்தைப் போன்ற தன்மை கொண்டதாகும். பங்குச் சந்தையின் செயல்பாடுகளுக்கு ஏற்ப நிறுவனங்களுக்குத் தனிமுத்திரைகள் வழங்கப்படுகின்றன. சில நேரங்களில், குறிப்பிட்ட துறையின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காகக் குறியீடுகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறியீடும் தனித்த மதிப்பு கொண்டவை. இந்தக் குறியீடுகளின் மதிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்புடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. இத்தகைய குறியீடுகளில் நாம் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. முதலீட்டாளர்கள் குறியீட்டு நிதியத்தில் முதலீடு செய்கின்றனர். உதாரணமாக, குறியீட்டின் அடிப்படையில் பங்கின் மதிப்பு 15% என்றால், நிதியம் அதே 15% மதிப்புக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டாளர்களுக்கு இலாபத்தை உருவாக்க இது துணை செய்யும்.

பணச் சந்தைத் திட்டங்கள் (Money Market Scheme)

கருவூலப் பட்டியல்கள் (T- bills), வைப்புநிதி ஆவணங்கள் (CD), வணிக ஆவணங்கள் (CP) ஆகியவையும் பணச்சந்தைத் திட்ட பரஸ்பர நிதியத்தில் அடங்கும். ஓரளவு நியாயமான இலாபம் இந்நிதியத்தின் மூலம் உடனடியாகக் கிடைக்கும். குறுகிய காலத்தில் முதிர்ச்சி அடைவதால், மற்ற திட்டங்களைக் காட்டிலும் பணச் சந்தைத் திட்டம் சார்ந்த முதலீடுகள் தடுமாற்றமின்றி நிலையானதாக இருக்கும்.

சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்

நம்முடைய தேவைகள், எதிர்பார்க்கின்ற இலாபம் ஆகியவற்றுக்கு ஏற்ப, மேற்கண்ட திட்டங்களில் ஏதாவது ஒன்றினைத் தேர்வு செய்லாம். ஆனால் அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. தொடக்கக் காலத்தில் மிகுந்த பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வது நலம் பயக்கும். பணச் சந்தைத் திட்டங்கள், கடனுறுதி நிதியங்கள் ஆகியவை சற்றுப் பாதுகாப்பான திட்டங்கள் ஆகும். பரஸ்பர நிதியின் போக்கினையும் நோக்கினையும் புரிந்து கொண்ட பின்பு அதிக லாபம் தரக்கூடிய பிற திட்டங்களில் முதலீடு செய்ய முயற்சிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Different Types of Mutual Funds in India

Different Types of Mutual Funds in India
Story first published: Wednesday, April 4, 2018, 18:31 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns